மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 3 பேர் புறக்கணித்துள்ளனர்.
நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. மொத்தமாக 107 பத்ம ஸ்ரீ, 4 பத்ம விபூஷன் மற்றும் 17 பத்ம பூஷன் விருதுகள் என 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் 13 பேரும், அடுத்தபடியாக மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் 10 பேரும் பத்ம விருதுகளை பெறுவதாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு இந்த பட்டியலில் 7 பேருடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதில், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதே மாநிலத்தை சேர்ந்த, பிரபல தபேலா இசைக்கலைஞர் பண்டித் அனிந்தோ சாட்டர்ஜி மற்றும் பிரபல பின்னணி பாடகி சந்தியா முகோபத்தய் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இவர்கள் 3 பேரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகளை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். விருதுகள் அறிவித்த ஒரே நாளில் இவர்கள் புறக்கணித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.