இந்தியா

நெருங்கும் மக்களவை தேர்தல்: பாஜகவுக்கு எதிராக புதிய ஆயுதத்தைக் கையில் எடுக்கும் காங்கிரஸ்

61views

விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகிய விவகாரங்களை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், போராட்டங்கள் எங்கு நடைபெறும் எப்போது நடைபெறும் போன்ற முடிவுகளை சோனியா காந்தி எடுப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை தேர்தலுக்கு முன்னதாக பாஜக அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவை தான் முதன்மை பிரச்சினைகளாகக் கருதப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கட்சி தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டும் என அக்கட்சியினர் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில், போராட்டத்தில் முன்னிறுத்த வேண்டிய விவகாரங்கள் குறித்து மூத்த தலைவர்கள் விவாதித்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தலைமையிலான குழு, முக்கிய பிரச்சனைகளைக் கண்டறிந்து போராட்டத்துக்கான திட்ட அறிக்கையை சோனியா காந்தியிடம் ஒப்புதலுக்காக அளிப்பார்கள் என தெரிகிறது

இந்தக் குழு உறுப்பினர்களான ரிபுன் போரா, உதித் ராஜ் ஆகியோர், ராகுல் காந்தி போன்ற அனுபவமிக்க தலைவர், கட்சித் தலைவராக பொறுப்பேற்று நாடு முழுவதும் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

அதே போல, இந்தப் போராட்டத்தில் சமூக அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும் கலந்துகொண்டு, போராட்டத்தை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என உதித் ராஜ் தெரிவித்துள்ளார்.

குருத்வாரா ராகப் கஞ்ச் சாலையில் உள்ள ‘வார் ரூம்’ அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

அவர், ‘தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தைப் போராட்டத்தில் எழுப்ப வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!