என்னுடைய உடல்நிலை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் நேற்று முன்தினம் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த சூழலில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய அவர் , தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் . கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . முகக்கவசம் அணிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பாமக அவரது தொண்டர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமானோர் அன்பின் மிகுதியால் என்னிடம் நலம் விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர். அவர்களிடம் பேச முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது! நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை தேறி வருகிறது. அடுத்த சில நாட்களில் முழுமையாக நலம் பெற்று விடுவேன். எனவே, பாட்டாளி சொந்தங்கள் உள்ளிட்ட அனைவரும் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்! ” என்று பதிவிட்டுள்ளார்.