இந்தியாசெய்திகள்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம்தேதி தொடக்கம்: ஆகஸ்ட் 13 வரை நடக்கிறது

60views

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ஆம்தேதி தொடங்குகிறது, 20 அமர்வுகள் வரை நடத்தப்படும் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம்தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக மக்களவை சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், ‘ 17-வது மக்களவையின் 6-வது அமர்வு வரும் ஜூலை19ம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசின் அலுவல்களுக்கு ஏற்ப நடத்தப்பட்டு ஆகஸ்ட் 13-ம் தேதி கூட்டத்தொடர் முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையும் 19-ம் தேதி கூடுகிறது, ஆகஸ்ட் 13-ம் தேதிவரை கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் இந்த முறை 19 முதல் 20 அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில் கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மக்களவை எம்.பி.க்கள் 444 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 218 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இன்னும் செலுத்தப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மழைக்காலக்கூட்டத்தொடர் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது, குளிர்காலக்கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8ஆம் தேதிவரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரு பிரிவுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டும், கரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 8ஆம்தேதியோடு கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது.

இந்த முறை மழைக்காலக்கூட்டத்தொடரிலும் எம்.பி.க்கள் சமூக விலகலைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்படும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!