நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் பங்கேற்ற கேளிக்கை விருந்தில் சானிட்டரி நாப்கினில் போதை பொருள் மறைப்பு
மும்பை சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பங்கேற்ற கேளிக்கை விருந்தில் சானிட்டரி நாப்கினில் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை என்சிபி அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
கடந்த 2-ம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு புறப்பட்ட கார்டிலியா சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்து நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான்உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தினர்.
அப்போது போதை பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் ஆர்யன் கான் உள்ளிட்டோரை கைது செய்தனர். என்சிபி அதிகாரிகள் சொகுசு கப்பலில் சோதனை நடத்திய போது ஆண்கள் தங்களது ஷூக்களிலும் பெண்கள் சானிட்டரி நாப்கனிலும் போதை பொருட்களை மறைத்து தப்ப முயன்றனர்.
மத்திய பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட மாடல் அழகி முன்முன் தாமிசாவும் அவரோடு இருந்த பெண்களும் சானிட்டரி நாப்கனில் போதை பொருளை மறைத்து வைத்திருந்தனர். ஆர்யன் கான் உள்ளிட்டோர் தங்களது ஷூக்களில் போதை பொருட்களை மறைத்து வைத்தனர். என்சிபி அதிகாரிகள் அவற்றை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்த வீடியோவை என்சிபி வெளியிட்டுள்ளது.
கேளிக்கை விருந்து வழக்கு கடந்த 8-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆர்யன் கானின் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றங்களை என்சிபி அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதில் ‘புட்பாலை’ (போதைப்பொருள்) கொண்டு வருமாறு போதை பொருள் தரகரிடம் ஆர்யன் கான் கூறியிருப்பது அம்பலமானது. கடந்த 8-ம் தேதி விசாரணையின் போது ஆர்யன் கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த காவல் முடிந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் போது, அவரையும் போதை பொருள் தரகர் ஆசித் குமாரையும் நேருக்கு நேர் நிறுத்தி விசாரணை நடத்த என்சிபி தரப்பில் கோரிக்கை விடுக்கப்படும். இதன்படி ஆர்யன் கானின் காவல் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே நைஜீரியாவை சேர்ந்த ஓகாரா என்பவர் கோரேகானில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைதாகி உள்ளனர்.
இதுகுறித்து என்சிபி வட்டாரங் கள் கூறியதாவது:
மும்பை உள்ளிட்ட பெருநகரங் களில் பிரபலங்களின் வாரிசுகள் போதை விருந்து நடத்துவது வாடிக்கையாக உள்ளது. பல முறை அவர்கள் தப்பி வந்தனர்.
மும்பை சொகுசு கப்பல் கேளிக்கை விருந்தில் மிக எச்சரிக் கையாக செயல்பட்டு போதை பொருட்களை கைப்பற்றினோம். என்சிபியை சேர்ந்த 25 அதிகாரிகள் களத்தில் பணியாற்றினர். பெண் கள் உட்பட 6 அதிகாரிகள் மாறு வேடத்தில் சொகுசு கப்பலில் இருந்தனர். இதன்காரணமாக ஷூக்களில் போதைபொருள் மறைக்கப்பட்டதை கண்டறிய முடிந்தது.
இவ்வாறு என்சிபி வட்டாரங்கள் தெரிவித்தன.