310views
“தோழமை என்றொரு பெயர்” என்ற தோழர் ஆசுவின் கவிதை நூல் முழுவதும் படித்த பெரும் கணத்திலிருந்து’ எழுதுகிறேன். எந்த இசங்களுக்கும் உட்படாமல், சொற்களை வலிந்து திணிக்காமல் அவரைப்போலவே கவிதைகளும் மிக எளிதான சொற்களில் நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உட்பொருள் தத்துவார்த்த மிக்க ஆழ்ந்த கணத்தையும் உணர்த்துகிறது.
நாம் வெகுசாதாரணமாக தினமும் பார்த்து கடந்துவிடுகிற பல காட்சிகளை ஆசு நின்று நிதானித்து அதன் உள்ளார்ந்த தத்துவங்களை இயற்கை+ உயிர்கள்+மனிதன்+நேயம்+நட்பு =அன்பு. என்பதாக அவரின் அனைத்து கவிதைகளின் உட்கருத்தாக உணர்த்துகிறார்.DDS எபக்ட் உள்ள திரையரங்கில் டைட்டானிக் படம் பார்க்கும்போது எல்லா இசைக் கோப்புகளையும் மீறி அந்த பெருங்கடலின் அலையோசை மிக மெலிதாக நம் காதுகளில் ஒலிப்பதை உணரமுடியும் அது போல ஆசுவின் இந்த தொகுப்பை வாசிக்கும் போது அன்பில் தோய்ந்த மயிலிறகால் உங்கள் மனங்களில் புதைந்திருக்கும் ஞாபக வடுக்களை வருடிவிடுவதை உணரலாம். நான் உணர்ந்தேன்.
ஒவ்வொரு கவிதைக்கும் ஓர் சொற்சித்திரம் எழுதலாம், ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்று தமிழில் ஓர் சொல்லாடல் உண்டு. இத்தொகுப்பில் ஒரு கவிதையை மட்டுமே பேசுகிறேன். தொகுப்பின் தலைப்பாக அமைந்த தோழமை என்றொரு பெயர் அமைந்த கவிதை அது மரத்திலிருந்து உதிரும் இலை பற்றி ஆசுவின் கவிச்சித்திரம், “உதிரும் இலை” இச்சொல் பலரின் கவிதைகளில், சிறுகதைகளில் ஏற்கனவே பயன்படுத்திய தத்துவார்த்த மிக்க பொருள்தரும் சொல். பேரா.தோழர் யாழினி முனுசாமி தனது கவிதை தொகுப்பிற்கு உதிரும் இலை என்று தலைப்பிட்டிருந்தார்.
நமக்கு முன்பாக நிறைய ஏன் ஒரு சில மரங்கள், செடிகள் இருக்கலாம், நாம் கடந்த பாதைகளில் உதிர்ந்த இலைகள் மிதிபட்டிருக்கலாம், ஆனபோதும் இலை உதிரும் தருணத்தில் அதைப் பார்த்த நினைவேதும் இல்லை. ஓர் இலை தானாக மரத்திலிருந்து உதிர்வென்பது வெறும் நிகழ்வல்ல, அதுவொரு தவத்தின் உச்சம், அனுபவத்தின் படிமம், காலம் நமக்குணர்த்தும் வாழ்க்கைப் பாடம். மலர்தல் என்பது பிறப்பாகவும், உதிர்தல் என்பது இறப்பாகவும் இங்கு அறியப்படுகிறது (மலர்ந்தது- தேதி, உதிர்ந்தது – தேதி) இலை உதிர்வதற்கும், மனிதனின் மரணத்திற்கும் குறைந்தபட்சம் சில வேறுபாடுகள் உண்டு. மனிதன் உதிர்வதற்கு (மரணிப்பதற்கு) பல்வேறு மத இன நிர்கதியங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆனால் அதையெல்லாம் மனிதன் பின்பற்றி தான் மரணிக்கின்றானஎன்றால் இல்லை என்பதே உண்மை.
இலைக்கென்று எந்த நிர்பந்தியங்களும் இல்லாதபோதும் அவைகள் இயற்கையின் நிர்கதியங்களை பின்பற்றியே உதிர்கின்றன. ஓவ்வொரு இலையும் உதிரும்போதும் (வாய்ப்பு ஏற்படுத்திக்கொண்டு பாருங்களேன்) மெல்ல மெல்ல அப்படியே காற்றில் சுழன்று, தவழ்ந்து தேர்ந்த நடனக்கலைஞரின் அபிநய அடவுகளைப் போல இடவலமாக ஆடியபடி தரையைத் தொடும் காட்சி. நான் இவ்வுலகில் விதையாக தொடங்கிய என் வாழ்வு செடியாகி, மரமாகி, மலராகி, கனியாகி, நிழலாகி பலருக்கும் பயனாகி முடிந்துவிட்டது. இதோ எங்கிருந்து முளைத்தேனோ அங்கு திரும்புகிறேன் என் தாய்மடியை முத்தமிட்டு மகிழவே, மீண்டும் விதையாகி மலர்வேன். மரணம் என்பது மீண்டும் மலர்தலே. பயனற்ற பழுத்த இலையாக மரத்திலிருப்பதை விட மண்ணில் உதிர்ந்து மக்கி உரமாகி மலர்வது எனக்கு பெருமகிழ்வே, என்று ஆனந்ததாண்டவம் ஆடுவதுே போலவே உதிர்கிறது இலை.
மனிதர்களே நீங்களும் உதிர்தலை (மரணத்தை) உற்சாகப்படுத்துங்கள், மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெருங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது உதிரும் இலை. தோழர் ஆசு உணர்த்தும் கவிச் சித்தரமும் அதுதான். ஒரு கிளையில் இலையாக இருக்கும்போது அதை காற்று நால திசைகளிலும் ஆட்டி மகிழ்வித்தது, இலை இப்போது பழுத்து உதிர்கிறது நேராக மண்ணில் விழுந்தால் சிதைந்துவிடக்கூடுமென்பதால் அதே காற்று அதை அரவணைத்து லேசாக மண்ணின் மடியில் சேர்க்கிறது. அந்த காற்றுக்கு பெயர்தான் தோழமை.
“உதிர்வதெல்லாம்
தளிர்ப்பதற்கே
எனினும்
உதிர்கையில் அணைக்கும்
காற்றுக்குதான் தோழமை என்றொரு பெயராகும்.”
தோழமை என்றொரு பெயர் – ஆசு.
பக்கம் -115, விலை-150,
வாசகசாலை பதிப்பகம்
சென்னை-600073.
தொடர்புக்கு-9942633833,9790443979.
E.Mail-vasagasalai@gmail.com.
-
கோ.மகேசன்