தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்தது. செஞ்சூரியனில் நடந்த இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் – மயன்க் ஆகிய இருவருமே சிறப்பாக பேட்டிங் ஆடினர். அபாரமாக ஆடி சதமடித்த ராகுல் 123 ரன்களை குவித்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மயன்க் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரஹானே 48 ரன்களும், கோலி 35 ரன்களும் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 327 ரன்கள் அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 197 ரன்கள் மட்டுமே அடித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக டெம்பா பவுமா 52 ரன்கள் அடித்தார். அவர் ஒருவர் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு சுருண்டது.
130 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, மொத்தமாக 304 ரன்கள் முன்னிலை பெற்றது.
305 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கரை 77 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா. அதன்பின்னர் குயிண்டன் டி காக்கை 21 ரன்னில் சிராஜ் வீழ்த்த, முல்டர் மற்றும் ஜான்செனை முகமது ஷமி வீழ்த்தினார். கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசன் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது தென்னாப்பிரிக்க அணி.
கடைசி 3 விக்கெட்டுகளையும், 2வது செசன் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய பவுலர்கள் வீழ்த்தினர். 2வது செசனில் ஜான்செனை 13 ரன்னில் வீழ்த்தினார் ஷமி. அதன்பின்னர் ரபாடா மற்றும் இங்கிடி ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி போட்டியை முடித்துவைத்தார் அஷ்வின். 2வது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
செஞ்சூரியன் தென்னாப்பிரிக்காவின் கோட்டை. செஞ்சூரியனில் இதுவரை தென்னாப்பிரிக்க அணியை டெஸ்ட் போட்டியில் எந்த ஆசிய அணியும் வீழ்த்தியதில்லை. முதல்முறையாக இப்போது தான் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை செஞ்சூரியனில் வீழ்த்தியிருக்கிறது.