369
கப்பலேறி வந்தது ஒருகடை
பனிமலை இமயம் முதல் தென்கடல் குமரி வரை
குறுநில சிற்றரசுகளையும் பெருநில பேரரசுகளையும்
வணிகப்பரப்பாக்கி விரிந்திட இல்லை தடை…
நஞ்சக வணிகர்க்கு நாடாள பிறந்தது ஆசை
வகை வகையாய் வலைகள் விரித்தது…
சூழ்ச்சியும் வஞ்சனையும் பொங்கிப் பெருகிட
பாரதம் ஆனது “பரங்கியர்தம் அடிமை தேசம்…”
சொந்த நாட்டை வந்த வணிகர்கள் ஆள பார்த்திருப்போமா
என்றிங்கே வீரமாய் போராடி மாய்ந்தது தீரர் கூட்டம்…
ஆனாலும் ஓயவில்லை பிரிட்டீஷ் கம்பெனி ஆட்டம்…
ஆனமட்டும் சுரண்டியது
வளத்தையும் மக்கள் உழைப்பையும் தனது உடைமையாக்கி
தேசத்தை சேதாரப்படுத்தியது…
பீரங்கிப்படையோடு வில்அம்புப் படைகள் மோதின…
வீர மரணங்களை தன்மானத்தோடு ஏய்தின…
அடிமை தேசம் ஒன்று திரண்டது…
என்நாடு எனது கடைதிறக்க வந்த நீ
உன் நடையைக்கட்டு என்றது…
அடிகளும்,வலிகளும்,கொடுமைச் சிறைகளும்
கண்டு துவளாத தேசாபிமானம் நம்
மானபிமானங்களை காப்பதே வாழ்வின் கடன் என்று போராடியது
இறுதி முச்சு உள்ளவரை மாறாதிருந்தது உறுதி.
வங்கத்து தங்கமொன்று அயலகம் சென்றது…
உதிரம் கொடுத்தால் விடுதலை என்றது…
உதிரம் என்ன உயிரையும் தருவோம் என்று திரண்டது ஒரு படை.
நேதாஜி திரட்டிய வீரப்படை கண்டு மருண்டது ஆங்கிலக்கடை.
கணக்கற்ற உயிர்கள் பலியாய் கொடுத்தும்
விடுதலை வராத வரமாயிருக்க வந்தார் காந்தி
ஆப்ரிக்க மண்ணில் கற்ற பாடத்தை
ஆங்கிலேயேரை எதிர்க்கும் அஸ்திரமாக்கினார்…
வாலையும் வில்லையும் வீழ்த்திய கம்பெனிக்கு
சத்தியத்தையும் அகிம்சையும் வென்றிட வழியில்லை
அரையாடை கட்டிய எளிய தலைவனின் பின்னால்
அணிதிரண்டது இந்திய தேசம்…
வரிகொடா இயக்கம் ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
என ஓயாமல் இயங்கியது இந்திய தேசம்
கண்ணீர்க் கதைகளுக்கு வந்தது முடிவு
நமது நாடு நமதே என்று பிறந்தது விடிவு
1947 – இதே நாளில்
கப்பலேறி போனது அந்நியக்கடை..
விலகியது பாரதத்தின் இரண்டரை நூற்றாண்டுத் தடை
ஒற்றுமையே நம் பலம்
ஒருதாய் மக்களாய் வாழ்வதே நம் குணம்
இந்திய சுதந்திரத்தின் அமுதப் பெருவிழாவில்
பட்டொளி வீசிப்பறக்கும் தேசியக்கொடி
காற்றால் பறக்கவில்லை…
உயிரும் உடலும் உடைமையும் தேசத்திற்காய்
தந்தவர்களின் தியாகத்தால் பறக்கிறது!
ஜெய் ஹிந்!
-
கே.பிரபாகரன்