தமிழகம்

திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல்லில் அறநிலையத் துறை சார்பில் 3 கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

70views

திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, துறையின் சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய நான்கு பாடப் பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணையும் வெளியிடப்பட்டது.

சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டிலேயே கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற பெயரில் கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக கல்லூரியை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இக்கல்லூரியில் 7 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகம், ஒரு நூலகம், கல்லூரி முதல்வர் நிர்வாக அறை, பேராசிரியர், பணியாளர்கள் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த நவ.2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இந்த ஆண்டு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், கல்வி உபகரணங்கள் அனைத்தும் முதல்வர் ஏற்பாட்டின் பேரில் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேலும் 3 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம் சார்பில் ஒட்டன்சத்திரம் சின்னய கவுண்டன் வலசில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு பழனியாண்டவர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சமய வகுப்புகளுடன் தற்காலிக கட்டிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக் கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, விளாத்தி குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பெரியார் பல்கலைக்கழகத்தின்கீழ் இணைக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுப்புளியம்பட்டி கிராமத்தில் தற்காலிக கட்டிடத்தில் சமய வகுப்புகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த 3 கல்லூரிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். கிராமப்புற மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்லூரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, பி. கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அர.சக்கரபாணி, மா.மதிவேந்தன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!