தமிழகம்

திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வு வழங்கினால் ரூ.5 லட்சம் பரிசு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

47views

திடக்கழிவு மேலாண்மையில் தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னையில் தினமும் சுமார் 5 ஆயிரத்து 100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளை வீடு வீடாக வரும் தூய்மைப் பணியாளரிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து மட்டுமே வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பைகளை சாலையில் வீசி எறிவோர், தீயிட்டு கொளுத்துவோர் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இருப்பினும் குப்பைகளை வகை பிரித்து பெறுவதிலும், வீடு வீடாக குப்பைகளை சேகரிப்பதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மையை தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்கு புதுமையான தீர்வுகளை வழங்குவோருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்துவதில் சமூக பங்களிப்பை மேற்கொள்வது, பொது இடங்களில் கழிவுகள் கொட்டுவதை தடுப்பது, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை போன்றவற்றை டிஜிட்டல் முறையில் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்கான புதுமையான தீர்வுகள் வரவேற்கப்படுகின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும்.

தீர்வுகளுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2-வது பரிசாக ரூ.2.5 லட்சம், 3-வது பரிசாக ரூ.1.5 லட்சம், 4-வது பரிசாக ரூ.1 லட்சம், 5-வது பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். திடக்கழிவு மேலாண்மை தொடர்பான தீர்வுகளை டிசம்பர் 31-க்குள் solidwastecorp5@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தின் எப்பகுதியில் இருந்து வேண்டுமானாலும் தீர்வுகளை வழங்கலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!