இலக்கியம்கட்டுரை

தாய்ப்பாலூட்டல் என்பது அழகான அன்பும், உணர்வும்

289views
ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு தாய்க்கு இருக்க கூடிய மிகப்பெரிய இன்பங்களில் ஒன்றாக நம்பப்படுகிறது. அது குழந்தைக்கும் தாய்க்கும் இன்றியமையாதது ஆகும். ஆனால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் உடல்வாகு மாறிவிடும், அழகு குறைந்துவிடும் என்ற சில தவறான கருத்துகள் நிலவுவதால் தாய்ப்பாலூட்டல் குறைவாகவே உள்ளது.
தாய்ப்பாலூட்டுவதின் மூலம் தாய்க்கு உடல் மற்றும் மனதளவில் பல நன்மைகள் வருகின்ற என்பதே உண்மை. எனவே தாய்ப்பாலூட்டலின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குழந்தைகளின் முழு வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் தாய்ப்பாலூட்டல் முக்கியமானது என்பதை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பாலூட்டல் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் உலக சுகாதார நிறுவனம்(WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனமும்(UNICEF) 1990 ஆம் ஆண்டு முதல் தாய்ப்பாலூட்டல் வாரத்தை முன்னெடுக்கின்றன. அதன் பிறகு 1991 இல் உலக தாய்ப்பாலூட்டல் நடவடிக்கை அமைப்பு(World Association of Breastfeeding Action) உருவாகி உலக சுகாதார நிறுவனம்(WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனத்தின்(UNICEF) குறிக்கோள்களை நிறைவேற்றத் தொடங்கியது. 1992 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் முதல் வாரம் இப்பிரச்சாரத்தை ஊக்குவிக்க முழுவதுமாக அர்பணிக்கப்பட்டது. முதலில் சுமார் 70 நாடுகள் இதைக் கொண்டாடிய நிலையில் இன்று விழிப்புணர்வு அதிகமாகி 170 நாடுகள் கொண்டாடி வருகின்றன.
உலக சுகாதார அமைப்பு தாய்ப்பாலைக் குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து ஆகாரமாக அங்கீகரிக்கிறது. மேலும் பிறந்த குழந்தைக்கு ஒரு மணிநேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் ஆறுமாதங்களாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும்(WHO), ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல நிறுவனமும்(UNICEF) பரிந்துரைக்கின்றன. குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதிபடுத்த அவர்களுக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என பரிந்துரைக்கிறன. ஆறு மாதங்களுக்கு பிறகே குழந்தைகளுக்கு பிற உணவுகளை அறிமுகம் செய்யவேண்டும் எனவும், அதுவரையில் குழந்தைகளுக்கு குடிநீராகவும் தாய்ப்பால் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றது.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளை இரைப்பை சார்ந்த நோய்கள், நிமோனியா, நீரிழிவு, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு நோய்த் தொற்றுகளில் இருந்தும், நோய்களில் இருந்தும் பாதுகாக்கலாம். ஏனெனில் தாய்பாலின் ஊட்ட உணவானது தாயின் உடல் சேமிப்புக்களிலிருந்து இரத்த ஓட்டம் மூலம் பெறப்படுவதாகும்.  தாய்ப்பாலில் நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின்கள், மினரல்ஸ், அமினோ அமிலங்கள், என்சைம்ங்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் சம அளவில் உள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, தாய்ப்பாலூட்டல் குழந்தைகளுக்கு மட்டும் நன்மை தருவதல்லாமல் தாய்மார்களுக்கும் மார்பக புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், நீரிழிவு நோய்கள் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் தாய்ப்பால் ஊட்டலின் போது தாயின் உடலில் உருவாகும் ஆக்சிடாசின், புரோலாக்டின் போன்ற இயக்குநீர்கள் தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பிணைப்பை அதிகரிக்க உதவுகிறது.
எயிட்ஸ் தொற்று உள்ள தாய்மார்கள், மார்பக மாற்றம் அல்லது மார்பகத்தில் ஏதேனும் அறுவைச்சிகிச்சை செய்த மற்றும் மனநோய் சம்பந்தமாக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் தாய்மார்கள் தாய்ப்பாலூட்டலை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் குழந்தைக்கு தொற்றோ அல்லது ஒவ்வாமையோ ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் குழந்தைகள் 24 மணிநேரத்தில் 12 முதல் 18 முறை வரை தாய்ப்பால் குடிப்பார்கள். எனவே வேலைக்கு செல்லும் பெண்கள் ப்ரெஸ்ட் பம்ப்(Breast pump) மூலம் தாய்ப்பாலை சேமித்து வைத்து பின்னர் குழந்தைகளுக்கு சங்கு மூலமோ அல்லது பாட்டில் மூலமோ அளிக்கலாம். அதேபோல் ஆரம்பத்தில் தாய்மார்களுக்கு பால் சுரப்பது குறைவாக இருந்தாலும் குழந்தைகள் மார்புக்காம்பைப் பற்றி உறிஞ்ச உறிஞ்ச அதிகமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலை போல வேரெந்த உணவும் ஊட்டச்சத்தையோ அல்லது பாதுகாப்பையோ அளிக்காது. மேலும் தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பந்தத்தையும், இன்பத்தையும் தாய்ப்பாலூட்டல் அதிகரிக்கிறது. எனவே தாய்ப்பாலூட்டல் என்பது தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்குவது மட்டுமல்ல, அது தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள ஒரு அழகான அன்பும், உணர்வுமாகும்.
  • ந.செல்வ முருகன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!