காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த உத்தரவு வரும்வரை பள்ளிகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை நிறைவடையும்போது, காற்றின் திசை மாறி பஞ்சாப், ஹரியாணாவில் இருந்து டெல்லியை நோக்கி காற்று வீசும். இந்த காலத்தில் அண்டை மாநிலங்களின் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும்.
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.)6 வகைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 – 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது.
151 – 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.
கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. டெல்லியில் நேற்று காற்று தரக் குறியீடு 382 புள்ளிகளாக பதிவானது. தலைநகரில் நாள்தோறும் சராசரியாக 400 புள்ளிகள் பதிவாகி வருகிறது. இது மக்களின் உடல் நலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அத்தியாவசியம் இல்லாத சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவும், கட்டுமானப் பணிகள், கட்டிடங்களை இடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் டெல்லி கல்வித் துறை நேற்று வெளியிட்ட உத்தரவில், ‘டெல்லியில் காற்றுமாசு அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும். ஆன்லைன் கல்வியை தொடரலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.