நிகழ்வு

“தமிழ் தேசத்தின் எதிரி யார்” கருத்தரங்கம்

185views
திராவிடத்தின் மீது தீராப் பகை கொண்டு சீர்குலைவு செய்துவரும் சீமான், மணியரசன் போன்றவர்களை கருத்து ரீதியாக கேள்விக்குள்ளாக்கிய வரலாற்று சிறப்புமிக்க கருத்தரங்கம் சென்னையில் செய்தியாளர் அரங்கில் “தமிழ் தேசத்தின் எதிரி யார் “என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக இன்று (19/09/2021)நடந்தது.
இந்த கருத்தரங்கை தோழர். பொழிலன் அவர்கள் தலைமையில் இயங்கும் தமிழ்தேசம் நடுவம் என்ற அமைப்பு ஒருங்கிணைப்பு செய்திருந்தது.
இதில் பேசிய ஆளுமைகள் ஒவ்வொருவரும் வரலாற்று வழியில், கோட்பாட்டு வழியில், அரசியல் வழியில் செயல்பாட்டில் என எல்லா வழிகளிலும் தமிழ் தேசத்தின் எதிரியாக இருப்பது டெல்லி வல்லாதிக்கமாகும்.
டெல்லி வல்லாதிக்கத்தை இந்திய தேசியம் என்ற பெயரில் பார்ப்பன, பனியா முதலாளிய வர்க்கமும் பன்னாட்டு மூலதன சக்திகளும் இயக்கி வருவதை விளக்கினர்.
இந்த டெல்லி வல்லாதிக்கம் தான் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி சுரண்டி வருகிறது .
சாராம்சமாக அனைத்து தேசிய இனங்களின் அரசியல், பொருளியல், பண்பாட்டியல் உரிமைகளை பறித்து இறையாண்மையற்ற அடிமைகளாக அந்த மக்களை வைத்துள்ளது.
தமிழகத்தில் திராவிட இயக்கம் ஜனநாயக வழியில் தமிழ் சமூக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது.
திராவிடம் என்பது பெரியார் கண்டுபிடித்தது அல்ல அது அயோத்திதாசர் தொடங்கி இரட்டைமலை சீனிவாசன்,
எம்.சி.இராஜா போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பு அடையாளமாக உயர்த்திய ஆதிக்க எதிர்ப்பு கருத்தியலே திராவிடம் என்பதனை அறிஞர் பெருமக்கள் ஆதாரங்களோடு நிறுவினர் .
திராவிடம் என்பது இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட சூத்திர மக்களை வீறு கொண்டு எழச் செய்த ஒரு அரசியல், பண்பாட்டியல் கருத்தாக்கம் என மிக அழகாகப் பதிவு செய்தனர்.
மொழிப்பற்று சரியானது; மொழி வெறியும் இனவெறியும் பாசிசத்தின் கூறுகள் என்பதனை உரையாளர்கள் தெளிவாக்கினார்.
தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த கருத்தியல் போராட்டம் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் அறிவித்ததையும் கருத்தரங்கம் கவனத்தோடு பதிவு செய்தது .
வரலாறு தெரியாத சீமான் போன்றவர்களின் வெற்று ஆரவாரம் அரசியலாக முடியாது.
இந்த சக்திகள் தமிழ் தேசத்தின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சக்திகள் என கருத்தரங்கில் உரையாளர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
மணியரசன் போன்றவர்களின் இந்த அரசியல் போக்கு கவலை தருவதாக இருக்கிறது என அறிஞர் பெருமக்கள் மிகவும் வருத்தம் தெரிவித்தனர்.
தமிழ் தேசத்தின் இறையாண்மை உரிமையைப் பெறுவதே இலக்காக இருக்க வேண்டும்.அதை சட்டமன்ற தேர்தல் மூலம் அடையவே முடியாது என அறிஞர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
இந்நிகழ்வில் பேராசிரியர் கருணானந்தம்,பேராசிரியர் செயராமன்,தோழர் வாலாசா வல்லவன்,தோழர் கி.வே.பொன்னையன்,தோழர் ஆழிசெந்தில்நாதன் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!