நிகழ்வு

“தமிழர் இலவயங்களை விட்டு வெளியே வரவேண்டும்! இல்லையேல்.. தமிழர் தன்மானம் பற்றி பேசமுடியாது. தனித்து உயர்வடையவும் முடியாது..” – பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

129views
இலவயங்களை சொல்லி ஆளும் அரசும் ஒரு அரசோ?அதை நம்பி வாழும் மக்களும் உயர்குடி மக்களோ? என இன்றைய தமிழரை பார்த்து கேலி செய்யும் உலகம். தான் உயர வளரும் மரம், செடி, கொடிகள் தன்னால் உயருமே தவிர, மற்ற மரங்கள் தருவதை எதிர்பார்த்து நின்று எதுவும் வளராது.
கடந்த கால ஆளத்தெரியாத திராவிட கட்சிகளால் தமிழர்களின் இனமான உணர்வுகளும் தன்மானமும் கெட்டுப் போனதேயொழிய வேறெந்த முன்னேற்றமும் அடைந்த பாடில்லை. அவர்களின் திரைப்படங்களை கொள்கைகளாக காட்டிக்கொள்ள முடிந்ததே தவிர.. தமிழர்களின் எந்த எண்ணமும் கொள்களாக கட்டி எழுப்பப்படவில்லை. மொழிப் போராட்டங்கள் மறக்கடிக்கப்பட்டு, எந்த மொழிபடித்தால் வேலை கிடைக்கும் என தமிழர்கள் அலைய.. தமிழ்நாட்டின் தெருக்களில் கடைகளில் வணிக நிறுவனங்களில் விளம்பர பலகைகளில் என எங்கும் தமிழ் இல்லாமல்.. அதை காணும் தமிழர்களின் மனதில் எந்த ஒரு தூண்டுதலும் இல்லாதவர்களாக மாற்றிப் போட்டு விட்டனர். அதனால் நிலவளமும் நீர்வளமும் கடல்வளமும் நமதா? என கேள்வியாய் தொக்கி நிற்க.. தமிழ்நாடு அரசு ஆறாயிரம் கோடி ரூபாய் கடனில் வட்டிக்கே போய்விடும் நாம் கட்டும் வரி வருமானங்கள். பாவம் நமது நிதியமைச்சர் அவர்கள்.
மாநில உரிமைகளுக்காகவே குரல் கொடுப்பது போன்று பேசியும் எழுதியும் வந்த திராவிடத்தால்.. அத்தனை உணர்வுகளும் மழுங்கிப்போயின. தமிழ்நாட்டு சாலைகள் எல்லாம் இந்தி, ஆங்கிலம் என பிற மொழிகளால் எழுதி வணங்க.. அவ்வப்போது தமிழ் வாழ்க?! என்ற முழக்கமும் நம் மானத்தை வாங்குகிறது. கல்வியில் இல்லை தமிழ். கற்கும் பாடசாலைகள் எல்லாம் ஆங்கில மயமாகிப் போனது. உலகத்தமிழ் மாநாடுகள் இல்லை. இயல், இசை அரங்குகள் இல்லை. உலகம் மதிக்கும் திருக்குறளை பல இடங்களில் இருந்தும் பெயர்த்தெறிந்துவிட்டு திருவள்ளுவர் பெயரால் புத்தாண்டாம்?! தமிழர் நம்மிடம் இருக்கும் திருக்கோயில்களை இழித்தும் பழித்தும் பேசுவது. கடவுள் தமிழருடையதல்ல. தெய்வங்கள் நமதல்ல.. என எதை எடுத்தாலும் அவர்களுடையது.. இவர்களுடையது என பேசிப்பேசியே நம்முடைய தை எல்லாம் பிறருடைய தாக்கி நம்மை ஏதுமற்றவர்களாக ஆக்கி வேடிக்கை பார்க்கின்றது திராவிட அரசியல்.
அந்நிய புத்தாண்டுகளை தடையின்றி கொண்டாட, தமிழர்தம் புத்தாண்டை பந்தாடி ஏமாற்றுகிறது தமிழ்நாட்டு அரசு. தை எப்படி நமக்கு சிறந்ததோ.. அதுபோலவே இளவேனிற கோடை தமிழ்ப்புத்தாண்டு, சொன்னேன் பூட்டி உள்ளவை தொடங்கிவைக்க என வரும் சித்திரையும் நமக்கு சிறந்ததே!
புதுப்புது ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தமிழரின் தொடராண்டை கேலிசெய்வதும்.. அதனை மாற்றி மாற்றி ஏமாற்றுவதும் வாடிக்கையாக.. அவர்களால் தமிழர்தம் திருநாளாம் பொங்கலை கொண்டாடுவதற்கு எத்தனை குறுக்கீடுகள். ஒரு உண்மைத் தமிழரொருவர் ஆட்சியில் இருந்தால்.. இதுபோன்ற கேடுகள் வர அனுமதிப்பாரா? என்பதுதான் நம் கேள்வியாகிறது. இதனை உணர்ந்தே நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் “தமிழாய்ந்த தமிழ்மகன் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆதல் வேண்டும்!” என்றார்.
அதனை உணர மறந்த தமிமிழரினம் இன்று இலவயங்களுக்கு ஏங்கி நிற்கிறது.. தன்னிலை மறந்து. பொங்கலென்றால்.. தாங்கள் ஈட்டிய செல்வத்தை சுற்றி இருப்போருக்கு வாரி வழங்கி மகிழ்ந்த தமிழர் நிலைகள் மாறிப்போயின. இதனால்..
தமிழர்கள் நாம் செய்தொழிலை மறந்து விட்டோம். நமக்கான உரிமைகள் என்ன என்ன உள்ளன என்பதை ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்க மறந்து விட்டோம். வெறுமனே வாழ, புகழவும் பழக்கடிக்கப்பட்டு விட்டோம். இனிமேல் என்ன உயர்வு வரும் தமிழருக்கு? இறைவன் கூட “தெய்வமே இல்லையென்றவர்க்கே.. நகையும் நட்டுமாக கொடுத்து, உருக்கி பணமாக்கிக் கொள்ள உதவுகிறார்?” இதற்குமேல் போலி பகுத்தறிவை பற்றி வேறென்ன சொல்ல?
இலவயங்களோடு பொங்கலும் சாதி பாகுபாடுகளோடு இட ஒதுக்கீடும் தமிழில் படித்தவர்களுக்கு ஏழு விடுக்காடு இடமும் அதிகாரிகள் தங்களின் கையெழுத்தை தமிழில் போடவேண்டும் என்பதோடு தமிழ் வளர்ச்சியும் மரங்களை நடச்சொல்லும் விளம்பரங்களோடு இயற்கை பாதுகாப்பும் மூடத்தனங்களை ஒழிக்கும் வரையில் ஓயமாட்டோம் என்று தமிழர் தலையில் குட்டி புண்ணாக்குதலும் என நீளுகிறது தமிழர்களின் எதிர்பார்ப்புகள்?!ஏழைகள் ஏழைகளே என்பது போய்.. இன்னும் இருப்போரை மும் ஏழைகளாக்கி மாயவலையில் வீழ்த்தி சிக்க வைத்து சுகம் கண்டு மகிழ்கிறது திராவிட அரசியல். இப்படியே போனால்.. தமிழர் பிற உலக இனங்களை போல் தனித்தியங்கி தன் அடையாளங்களை அழியாமல் பாதுகாப்பது தான் எப்போழ்து? உலகின் முதல் மொழி தந்த இனம். சங்கம் வைத்து தன்மொழியை வளர்த்த இனம். முடியுடைய மூவேந்தர்களை கண்டு செழித்து வாழ்ந்த இனம். எப்பொழுதுதான் விடிவை காண்பது? என்றைக்குதான் ஏமாற்றும் தூண்டிலை விட்டு, போக்கி எழுந்து பொங்கல் வைக்குமோ.. தமிழர் நாடு?.. அன்றே தமிழர் நமக்கு திருநாளாகும்! அதுவே நமக்கு உண்மை பொங்கலாக.. மாடுபிடி மஞ்சு விரட்டாக அமையும். அதற்கே நம் வாழ்த்துகளும் தமிழா! வணக்கம்.

பாவலர் மு இராமச்சந்திரன் தலைவர் தமிழ்த் தன்னுரிமை இயக்கம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!