தமிழகம்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவு- மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது!

49views

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது. நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் மிக அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருந்தது.

தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை செயல்படுத்தும் வகையில் சாலைகள், மேம்பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் மட்டுமே சுமார் 10,000 போலீசார் இரவு நேர ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சாலைகளில் இரவு 10 மணிக்கு மேல் தேவை இல்லாமல் ஊர் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதமும் விதித்தனர். பேருந்து நிலையங்களில் இருந்த கடைகளையும் மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டனர். இரவுப் பணிக்கு சென்றவர்கள் உரிய அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையம், விமான நிலையம் செல்லும் அல்லது அங்கிருந்து வீடு திரும்பும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இரவு நேர ஊரடங்கு அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேநீர் கடைகள் உள்ளிட்டவைகள் 5 மணிக்குப் பிறகு திறக்கப்பட்டன. அதேபோல் நீண்டதூரம் செல்லக் கூடிய வெளியூர் பேருந்து போக்குவரத்தும் அதிகாலை 5 மணிக்குப் பிறகு தொடங்கியது. தமிழகத்தில் 2-வது நாளாக இன்று இரவும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!