கவிதை

தமிழகத்தின் போர்க்குரல் தந்தை பெரியார்!!

502views
புரியாததை புரிய வைத்த
தென்னாட்டு இங்கர்சால்!
அறியாமை இருளை கிழிக்க வந்த
ஈரோட்டின் கலகக்குரல்!
இராட்டையின் நூலால்
களத்திற்கு வந்தவன்!
பூநூல் வாலை அறுக்க
வாளாய் நிமிர்ந்தவன்!
வங்கக் கடலலையாய்
ஓயாமல் சுழன்றவன்!
மங்கிக் கிடந்த
வாழ்வில் ஒளிவிளக்கானவன்!
இவன் கிழவனல்ல- இருளை
கிழிக்க வந்த
கிழக்குத்திசை!
தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
மொத்தமாய் அத்தனைக்கும்
வைத்தான் வேட்டு!
எங்கும் இருள்
கொட்டும் மழை
சுழன்றடிக்கும் சூறாவளி
திக்கற்ற தேசத்தில்
இதோ விடிவெள்ளியாய்
நம் ஈரோட்டுப் பேரொளி!
மார்ட்டீன் லூதர்கிங்
ஆப்ரகாம் லிங்கன்
அம்பேத்கர்
பாதிக்கப்பட்டார்கள்
திமிறி எழுந்தார்கள்!
போராளியானார் மார்ட்டீன் லூதர்கிங்
அதிபர் ஆனார் ஆபிரகாம்
அண்ணலானார் அம்பேத்கர்
இவன் மட்டுமே
பாதிக்கப்படாத இடத்திலிருந்து
பாதிக்கப்பட்டவர்களுக்காய்
துணிந்து எழுந்தான்
தமிழகத்தின் தந்தை ஆனான்!
இதோ பெரியாரை நோக்கி
ஒரு கேள்வி
நீங்கள் இந்தியனா?
திராவிடனா?
தமிழனா?
இல்லை மனிதன் என்றார்!
எப்படி என இன்னுமோர் கேள்வி?
வலிமையான தேசமொன்று
வலிமை குறைந்த தேசத்தை
அடக்கியாள நினைத்தால் வலிமை குன்றிய தேசத்தின்
போராளியாய் இருப்பேன்!
அந்த வலிமை குன்றிய தேசத்தில்
ஒரு மதம் இன்னொரு மதத்தை
அடக்கி ஒடுக்குமானால்
ஒடுக்கப்பட்ட மதத்தின் குரலாய்
எதிரொலிப்பேன்!
வலிமைகுன்றிய மதத்தில்
ஒரு சாதி கீழ்சாதியென்று
ஒருசாராரை ஒடுக்குமானால்
கீழ்சாதிக்காரானாய் நிமிர்ந்து
நின்று போராடுவேன்!
ஒரு கீழ்சாதிக்காரன் முதலாளியாய்
இருந்து தனக்கு கீழே வேலைபார்க்கும்
தொழிலாளியை வஞ்சிப்பான் ஆனால்
தொழிலாளி பக்கம் நின்று போராடுவேன்!
வஞ்சிக்கப்பட்ட தொழிலாளி
நான் உழைப்பவன் என்று சொல்லி
தன் வீட்டில் இருக்கும் பெண்ணை
துன்புறுத்துவான் என்றால் அந்த
பெண்ணிற்கு பக்கத்தில் நிற்பேன்
என்றார்
ஆம் ஒடுக்குமுறை எங்கெங்கெல்லாம்
தலைவிரித்தாடுகிறதோ
அங்கெங்கெல்லாம் ஒடுக்குமுறைக்கெதிரான
கலகக்குரலாய் கர்ஜித்தவர்
தந்தை பெரியார்!

நாளும் கிழமையும்
வறியோர்க்கில்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கில்லை
என்றான் மக்கள் கவிஞன்
கந்தர்வன்
அடிமை விலங்கு பூட்டப்பட்டு
அடுப்படியில் கிடந்த பெண்களை
அறிவாயுதம் ஏந்தி
ஆர்ப்பரிக்கச் செய்தவன்
தந்தைப் பெரியார்!
பெரியார் கடவுளை எதிர்த்தார் ஏன்?
” கும்புடுறேன் சாமி”
என்பவனை ஊருக்கு
ஒதுக்குப்புறமாய் ஒதுக்கிவைத்து
தீண்டத்தகாதவன் என்று சொன்ன
மநூதர்ம சாத்திரத்தை தீயிலிட்டு
பொசுக்கினான் வெண்தாடி வேந்தன்!
நூலிழையில் சிக்கிக்கொண்டவனை
மயிரிழையில் காப்பாற்றியவன்
நம் அறிவுலக ஆசான்
தந்தை பெரியார்!
பெரியார்
சல்லிவேர்கள் அசைக்க
முயன்று தோற்றுப்போன எம்மண்ணின்
ஆணிவேர்!
போராட்டம்
மகிழ்ச்சிகரமானது
இன்னொன்றும்
மகிழ்ச்சிகரமானது
எதிரியை எரிச்சல்படுத்துவது!
ஆம் எதிரியிடம் போய்
சொல்லுங்கள் எங்கள்
ஈரோட்டு கிழவன் பெரியாரின் பெயரை!
சமத்துவம்
சகோதரத்துவம்
விடுதலைக்கு எதிரான
பார்ப்பனியத்தை தன்
கைத்தடியால் இறுதிவரை ஓங்கியடித்தவர்
தந்தை பெரியார்!

 

மதங்களின் கோபுரத்தை
தகர்த்தெறிந்தான்!
இதிகாச குப்பைகளுக்கு
தீயை வைத்தான்!
மநுதர்ம கோட்டைக்கு
வெடியை வைத்தான்
மானுடம் செழித்தோங்க
மனிதம் வளர்த்தான்!
இவன் பாமர மக்களுக்கு
விடிவெள்ளியானான்!
வனவாசம் முடிந்தும்
ஊருக்குள் வர அஞ்சுகிறான்
ராமன்!
எல்லையில் ராமசாமியின்
கைத்தடி!
கைத்தடி ஊர்சுற்றும் போதெல்லாம்
பூநூல்கள் பதுங்கிக்கொள்கிறது
சங்கரனின் காலடியில்!
ஈரோட்டின் மையம்!
தமிழ்நாட்டின் சூறாவளி!
கைத்தடியின் சுழலில்
அவ்வப்போது கரைஒதுங்கும்
பார்ப்பனிய தக்கைகள்!
வரலாறுகள் படித்திருக்கிறோம்
துப்பாக்கிகள் தந்த விடுதலையை!
இதோ எங்கள் தாயகத்தின் விடுதலை!
எங்கள் பாட்டனின் கைத்தடியில்!
பார்ப்பனிய சகதியில்
புதைந்து போனவனை
கடப்பாரையாய் மீட்டெடுத்தது
உன் கைத்தடி!
புழுக்களாய் நெளிந்தவனை
புலிகளாய் மாற்றியது!
அவ்வப்போது எம்தேசத்தின்
நெம்புகோலானது உனது
கைத்தடி!
காவிப்படர்ந்த செவ்வானத்தில்
தூசித்தட்டி விடியல்தந்தது
உந்தன் கைத்தடி!
சாதிமத வேதங்களை மட்டுமா
எரித்தது உன் கைத்தடி
டெல்லியின் சுருக்குக்கயிறையும்
அல்லவா சேர்த்து எரித்தது!
தமிழ்த்தேசத்தின் தந்தையே
எங்கள் தாயகவிடுதலையின் குறியீடு நீ!
கடனாய் கொடு உன் கைத்தடியை
மிச்சமிருக்குது இன்னும்
போர்க்களங்கள்!
ஆம் தமிழகத்தின் போர்க்குரல்
தந்தை பெரியார்!
  • நா.காமராசன், மண்டகொளத்தூர்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!