டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு இன்று பதில் மனுத் தாக்கல் செய்ய உள்ளது.
தலைநகர் டெல்லியில் நிலவும் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளி பண்டிகையின் போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசை கருத்தில் கொண்டு, ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் இந்த நடவடிக்கைகளால் மாநிலத்தில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளது. நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி காற்று தரக் குறியீடு 330- ஆக பதிவானது. இதன் மூலம் மிக மோசம் என்ற நிலையில், இருந்து மோசம் என்ற நிலைக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்வதால், அவசரகால நடவடிக்கையாக டெல்லியில் இரு நாட்கள் பொது முடக்கம் கொண்டுவந்து, காற்றின் தரத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்திருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், முழு ஊரடங்கு தொடர்பான முடிவை டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது.