உலகம்

டெல்டா அலை உச்சத்தை விட 3 மடங்கு அதிகரிக்கும் ஓமிக்ரான் – அமெரிக்க பல்கலைக்கழகம் கணிப்பு

57views

ஓமிக்ரான் தொற்று ஜனவரி மத்தியில் உச்சம் அடையும் எனவும் அப்போது தினமும் மூன்றரை கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அமெரிக்க பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் டெல்டா அலை உச்சத்தை விட இது 3 மடங்கு அதிகம் ஆகும் எனவும் அந்த பல்கலைக்கழக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 28 கோடி மக்களை பாதித்துள்ளது கொரோனா வைரஸ். பல நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று அலையும் வீசத் தொடங்கி விட்டது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் அதிதீவிரமாக பரவக்கூடியது என தகவல்கள் வெளியாகின. இந்த வைரஸ் கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி அறிவித்துள்ளது.

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் வைரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.

வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்டாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் இது என்பதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓமிக்ரான் அச்சம்: உ.பி தேர்தலை ஒத்திவைக்க பிரதமர் & தேர்தல் ஆணையத்திற்கு அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள்

300 கோடி பேர்

இன்னும் இரண்டே மாதங்களில் உலகமெங்கும் 300 கோடி பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும், தினசரி மூன்றரை கோடி பேருக்கு இதன் பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் இனஸ்டிடியூட் கணித்துள்ளது.

தினசரி பாதிப்பு அதிகரிக்கும்

இது குறித்து அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 மாதங்களில் சுமார் 300 கோடி நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி கணிப்பு கூறுகிறது. ஜனவரி மத்தியில் தொற்று உச்சம் அடையும். அப்போது தினமும் மூன்றரை கோடி பேருக்கு பாதிப்பு ஏற்படும்.

3 மடங்கு அதிகரிக்கும்

ஏப்ரல் மாதத்தில் டெல்டா அலை உச்சத்தை விட இது 3 மடங்கு அதிகம் ஆகும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஓமிக்ரான் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை டெல்டாவுடன் ஒப்பிடுகிறபோது 90-96 சதவிகிதம் குறைவாக இருக்கும். உயிரிழப்போர் எண்ணிக்கையும் டெல்டாவுடன் ஒப்பிடும்போது 97-99 சதவிகிதம் குறைவாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டாவும் ஓமிக்ரானும்

வைரஸ் பற்றி உலகமெங்கும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஓமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் ஒரு இரவோ அல்லது அதற்கு அதிகமாகவோ தங்க வேண்டியது வருவது, டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில் 40 முதல் 45 சதவீதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் பாதிப்பு குறைவு

ஏற்கனவே கொரோனா தொற்று வந்து மீண்டவர்களுக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது. டெல்டா உடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்பு குறைவு என்பதற்கு எங்கள் ஆய்வு சான்றாக அமைகிறது என்கிறார் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் நீல் பெர்குசன்.

பாதிப்பு குறைவு

ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஓமிக்ரான் பற்றி ஆராய்ந்து உள்ளனர். டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் பாதிப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மூன்றில் இரு பங்கு குறைவுதான் என்பதாகும். டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் நோய் தீவிரம் ஆவதற்கான வாய்ப்பு 70 சதவிகிதம் குறைவு என்றும் காட்டுகின்றன. எனவே டெல்டா உடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!