டி20 கிரிக்கெட்டில் ரோஹித் – ராகுல் ஜோடியின் சாதனைகளை தகர்த்தெறிந்த பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் ஜோடியின் சாதனைகளை தகர்த்துள்ளது பாகிஸ்தானின் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி.
பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் பட்டைய கிளப்பிவருகிறது. அதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் தொடக்க ஜோடி. பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துவருகின்றனர்.
டி20 கிரிக்கெட்டில் அவர்கள் இருவரும் அமைத்து கொடுத்த தொடக்கம் தான் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாபர்-ரிஸ்வான் ஜோடியே இலக்கை அடித்து விட்டதால், விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் மற்ற போட்டிகளிலும் அவர்கள் அபாரமாக பேட்டிங் ஆடினர்.
டி20 உலக கோப்பைக்கு பின்னரும் பாபர்-ரிஸ்வான் ஜோடி அபாரமாக ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து பாகிஸ்தான் அணி டி20 தொடரை வென்றது. முகமது ரிஸ்வான் தான் தொடர் நாயகன் விருதை வென்றார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 208 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு பாபரும் ரிஸ்வானும் இணைந்து 15 ஓவரில் 158 ரன்களை அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, 19வது ஓவரிலேயே 208 ரன்கள் என்ற இலக்கை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இது, பாபர்-ரிஸ்வான் இடையேயான 4வது 150+ ஸ்கோர் பார்ட்னர்ஷிப். டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடியின் 6வது 100+ பார்ட்னர்ஷிப் இது. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடி என்ற ரோஹித் – ராகுல் ஜோடியின்(5 முறை) தகர்த்துள்ளது பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி.
ரோஹித் சர்மா – ராகுல் ஜோடி 27 டி20 இன்னிங்ஸ்களில் 5 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதே 27 டி20 இன்னிங்ஸ்களில் 6 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்து, அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடி என்ற சாதனையை பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி படைத்துள்ளது.
அதேபோல், அதிகமுறை டி20 கிரிக்கெட்டில் 100 ரன்களுக்கு மேல் அடித்த தொடக்க ஜோடி என்ற ரோஹித் – தவான், ரோஹித் – ராகுல் ஆகிய ஜோடிகளின் சாதனையை தகர்த்துள்ளனர் பாபர் – ரிஸ்வான். ரோஹித் – தவான் மற்றும் ரோஹித் – ராகுல் ஆகிய 2 தொடக்க ஜோடிகளும் தலா 4 முறை டி20 கிரிக்கெட்டில் 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். பாபர் – ரிஸ்வான் தொடக்க ஜோடி 5 முறை 100 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளனர்.