2016 டி20 உலகக்கோப்பையிலும் கிட்டிமுட்டி வந்து ஸ்காட்லாந்து தகுதி பெறவில்லை, 2019 உலகக்கோப்பை தகுதியிலும் ஸ்காட்லாந்துக்கு சோகமே. ஆனால் இந்த முறை 2021 டி20 உலகக்கோப்பையில் அவர்கள் தகுதி பெறுவதை உறுதி செய்தனர். தகுதிச்சுற்றில் 3 போட்டிகளிலும் வென்று பிரமாதமாக தகுதி பெற்றுள்ளனர். ஒமான் அணியை 122 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி பிறகு 123 ரன்கள் இலக்கை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து அபார வெற்றி கண்டனர்.
இப்போது பிரிவு பியிலிருந்து வங்கதேசம், ஸ்காட்லாந்து தகுதி பெற்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஆகிய அணிகளுடன் ஸ்காட்லாந்து இணைந்துள்ளது. ஒமானின் ஜதீந்தர் சிங் அபாயகர வீரர், அவர் ஒரு சுதந்திரப் பறவை. இதற்கு முந்தைய 2 போட்டிகளில் 73, 40 என்று வெளுத்து வாங்கியவர். நேற்று ரன் அவுட் ஆகி வெளியேறினார். கஷ்யப் பிரஜாபதியும் விரைவில் வெளியேற ஒமான் அணி 13/2 என்று ஆனது.
ஜதீந்தர் சிங்கை ரன் அவுட் ஆக்கி விட்ட கடுப்பில் இருந்த தொடக்க வீரர் அகீப் இல்யாஸ் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 பந்தில் 37 விளாசினார். இவரும் முகமது நதீமும் (25) இணைந்து ஸ்கோரை 51 ரன்களுக்கு உயர்த்தினர் அப்போது அகிப் இல்யாஸ் வெளியேறினார். நதீமும் கேப்டன் ஜீஷன் மக்சூதும் இணைந்து ஸ்கோரை 79 ரன்களுக்குக் கொண்டு சென்ற போது நதீம் ஆட்டமிழந்தார். ஜீஷன் மக்சூத் மட்டும் ஒரு முனையில் நின்று 3 பவுண்டரி 1 சிக்சருடன் 30 பந்தில் 34 ரன்கள் என்று அடிக்க மற்றவர்கள் வரிசையாக டெலிபோன் எண் போல் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேற 43 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஒமான் அணி 122 ரன்களுக்குச் சுருண்டது.
ஸ்காட்லாந்து தரப்பில் ஜோஷ் டேவி 3 விக்கெட்டுகளயும் சஃப்யான் ஷரீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இலக்கை விரட்டும் போது ஸ்காட்லாந்து தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி 4 பவுண்டரிகளை விளாசி 20 ரன்களையும் கேப்டன் கைல் கொயெட்சர் 2 பவுண்டரி 3 பெரிய சிக்சர்களுடன் 28 பந்தில் 41 ரன்கள் எடுக்க 10 ஓவர்களில் ஸ்கோர் 75 என்று வந்தது, இன்னொரு முனையில் மேத்யூ கிராஸ் நிதானம் காட்டி 35 பந்தில் 26 எடுக்க, ரிச்சி பெரிங்டனின் காட்டடி தர்பாரில் 21 பந்தில் 3 மிகப்பெரிய சிகர்களுடன் 31 எடுக்க 17 ஓவர்களில் 123/2 என்று வென்றது ஸ்காட்லாந்து, உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.