ஒடிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கரோனாவின் முதல் அலை காரணமாக ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது. இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் கரோனாவின் 2-வது அலை நாடு முழுவதும் பரவி உள்ளது. ஒடிசாவிலும் தொற்று மிகவும் வீரியமாக உள்ளது. எனவே தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஒடிசா அரசு தெரிவித்து உள்ளது.
இது குறித்து ஒடிசா மாநில சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா வெளியிட்ட அறிவிப்பில், ”உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜெகந்நாதர் ரத யாத்திரை நடத்தப்படும். மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ரத யாத்திரையின்போது பூரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும். ரத யாத்திரை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும்” என்று கூறியுள்ளார்.