காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாடு கட்சியின் (என்சிபி) தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அவர்களை தீவிரவாதிகள் குறி வைக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகிறார்கள். இதனால் மாநில மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் என்சிபி கட்சி பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் பங்கேற்றிருக்க வேண்டும். காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்சிபி கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதனை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், காஷ்மீரில் தற்போது இருக்கும் கட்சிகளிலேயே மிகப்பெரியதும், மக்கள் செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சி என்சிபி மட்டுமே.
இவ்வாறு ஃபரூக் அப்துல்லா பேசினார்.