உலகம்

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா பதவி விலக முடிவு… புதிய பிரதமர் யார்?

49views

ஜப்பானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுப்பதில் மிகவும் மந்தமாக செயல்பட்டதாக பிரதமர் யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்தன. அதோடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கையை மீறி ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியததால் பிரதமர் யோஷிஹைட் சுகா மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்தக் காரணங்களால் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெரிதும் சரிந்தது. சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு மக்கள் மத்தியில் இருந்த ஆதரவு 70 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக குறைந்து விட்டதாக தெரிவித்தன.

இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ள ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் புதிய தலைவரை‌ தேர்வு செய்வதற்கான தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் இந்த மாத இறுதியில் பிரதமர் பதவியிலிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டோக்கியோவில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசிய யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.

ஜப்பானை பொறுத்தவரையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் அரசியல் கட்சியின் தலைவர் யாரோ அவரே அரசின் தலைவராகவும் அதாவது பிரதமராகவும் தேர்வு செய்யப்படுவார்.‌

அந்த வகையில் பிரதமர் யோஷிஹைட் சுகா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளதால், அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என தெரிகிறது. அதன்படி ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் ஜப்பானின் புதிய பிரதமராக பதவி ஏற்பார்.

ஜப்பானின் தடுப்பூசி திட்ட தலைவர் டாரோ கோனா மற்றும் மத்திய உள்துறை மந்திரி சானே தகைச்சி ஆகிய இருவரும் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களாக அறியப்படுவதாகவும் இவர்களில் ஒருவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!