ஜனவரி 26ம் தேதிக்குள்… எங்களது 6 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் வீட்டுக்கு செல்வோம்… ராகேஷ் டிக்கைட்
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இறையாண்மை உத்தரவாதம் உள்ளிட்ட எங்களது 6 கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் போராட்டத்தை முடித்து கொள்வோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கடந்த ஒராண்டாக டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், கடந்த சில தினங்களுக்கு முன் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வீட்டுக்கு செல்லும் படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறப்படும் என்று மத்திய அரசு கூறிவிட்டதால், விவசாயிகள் போராட்டத்தை முடித்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வேளாண் சட்டங்களை மட்டும் திரும்ப பெற்றால் போதாது எங்களின் ஆறு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டால் தான் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று விவசாயிகள் சங்கங்கள் அதிரடியாக அறிவித்துள்ளன. விவசாயிகளின் 6 கோரிக்கைகள் இதோ:
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு இறையாண்மை உத்தரவாதம்
விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெறுதல்
விவசாயிகள் போராட்டத்தில் நினைவிடம் கட்ட நிலம், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
முன்மொழியப்பட்ட மின்சார திருத்த மசோதா திரும்ப பெறுதல்
மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி நீக்கம்
காற்றின் தர மேலாண்மை ஆணையத்தில் உள்ள தண்டனை விதிகளை நீக்குதல்
பாரதிய கிசான் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிக்கைட் கூறுகையில், நாங்கள் நடத்தி வரும் போராட்டத்தில், மத்திய அரசு திரும்ப பெற முடிவு செய்துள்ள வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாதம், விவசாயிகள் மரணம் உள்பட பிரச்சினைகளும் அடங்கும். ஜனவரி 26ம் தேதிக்குள் எங்களது ஆறு கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டால் நாங்கள் திரும்பி (வீட்டுக்கு) செல்வோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் விவகாரம் குறித்து பேசுவோம் என்று தெரிவித்தார்.