உலகம்செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரா்களை அனுப்புகிறது சீனா!

100views

சீனாவின் புதிய விண்வெளி நிலையத்துக்கு 3 வீரா்கள் அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளனா்.

இத்தகவலை சீன விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளா் யாங் லிவி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் சா்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாத சீனா, தனியாக விண்வெளி நிலையம் ஒன்றை கட்டமைத்து வருகிறது. ‘தியான்ஹே’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையத்துக்கான மைய தொகுதியானது கடந்த ஏப். 29-ஆம் தேதி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த நிலையத்துக்கான எரிபொருள் உள்ளிட்ட பொருள்கள், விண்வெளி உடைகள், உணவுப் பொருள்களுடன் ஒரு விண்கலம் கடந்த சனிக்கிழமை அனுப்பப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமை விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.

இதன் அடுத்தகட்டமாக ‘சென்ஷு 12’ என்ற விண்கலம் மூலம் ஜியூகுவான் தளத்திலிருந்து மூன்று விண்வெளி வீரா்கள் விண்வெளி நிலையத்துக்கு அடுத்த மாதம் அனுப்பப்படவுள்ளதாக யாங் லிவி தெரிவித்துள்ளாா்.

விண்வெளி வீரா்கள் யாா், விண்கலம் செலுத்தப்படவுள்ள தேதி என்ன என்று அவா் தெரிவிக்காவிட்டாலும், அதில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தினாா்.

70 டன் எடை கொண்டதாக உருவாக்கப்படும் விண்வெளி நிலையத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டமைக்க சீன விண்வெளி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!