இந்தியா

செல்போன் கோபுரங்கள், தேசிய நெடுஞ்சாலை உட்பட மணிப்பூரில் ரூ.4.800 கோடிக்கு மேம்பாட்டு திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

47views

பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூருக்கு பயணம் செய்கிறார். அந்த மாநிலத்தில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு இன்று காலை 11 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். அந்த மாநிலத்தில் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.2,950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

மணிப்பூரில் ரூ.1,700 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். சில்சார்-இம்பால் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், பாரக் ஆற்றின் குறுக்கேரூ.75 கோடி செலவில் கட்டப்பட்ட இரும்பு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

சுமார் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்ட 2350-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் அர்ப்பணிக்கிறார். இதன்மூலம் மாநிலத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் சுகாதாரத் துறையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தலைநகர் இம்பாலில் ரூ.160 கோடிமதிப்பிலான நவீன புற்றுநோய் மருத்துவமனைக்கு பிரதமர்மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

கியாம்சியில் புதிதாக கட்டப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட கரோனா மருத்துவமனையை அவர் தொடங்கி வைக்கிறார். இம்பாலில் புதுப்பிக்கப்பட்ட கோவிந்தாஜி கோயிலை பிரதமர் திறந்து வைக்கிறார்

மணிப்பூர் பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி திரிபுரா தலைநகர் அகர்தலா செல்கிறார். அங்கு மகாராஜா வீர விக்ரம்விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை அவர் திறந்து வைக்கிறார். இதுரூ.450 கோடியில், 30,000 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

திரிபுரா முழுவதும் 100 மேல்நிலைப் பள்ளிகளை வித்யஜோதி பள்ளிகளாக தரம் உயர்த்தும் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் ரூ.500 கோடியில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு, மின் இணைப்பு, சிறந்த சாலைகள், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறைகள், ஒவ்வொரு குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்கும் திரிபுரா கிராம சம்ரிதி திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை பஞ்சாப் செல்கிறார். அங்கு பெரோஸ்பூர் நகரில் நடைபெறும் விழாவில், டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலை; அமிர்தசரஸ் – உனா நெடுஞ்சாலையை 4 வழிப்பாதையாக மேம்படுத்துதல்; பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முகேரியன்-தல்வாரா புதிய அகல ரயில் பாதை, பெரோஸ்பூரில் முதுநிலை மருத்துவ மையத்தின் கிளைமையம், கபூர்தலா, ஹோசியார்பூரில் 2 புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட ரூ.42,750 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

டெல்லி – அமிர்தசரஸ் – கத்ரா இடையே 669 கி.மீ. தொலைவுக்கு ரூ.39,500 கோடி செலவில் விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த விரைவுச்சாலை, டெல்லி -அமிர்தசரஸ் மற்றும் டெல்லி- கத்ரா இடையிலான பயணத் தொலைவை பாதியாக குறைக்கும்.

இந்த பசுமை விரைவுச்சாலை, சுல்தான்பூர் லோதி, கோவிந்த்வால் சாஹிப், கடூர் சாஹிப், தரண் தரண் போன்ற சீக்கிய மத வழிபாட்டுத் தலங்களையும், கத்ராவில் உள்ள இந்துக்களின் புனித தலமான வைஷ்ணவி தேவி கோயிலையும் இணைக்கும். இதுதவிர, ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீரின்முக்கிய பொருளாதார மையங்களான அம்பாலா, சண்டிகர், மொகாலி, சங்ரூர், பாட்டியாலா, லூதியாணா, ஜலந்தர், கபூர்தலா, கதுவா, சம்பா ஆகியவற்றை இணைக்கும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!