தமிழகம்

சென்னை – விளாடிவோஸ்க் கடல்வழி போக்குவரத்தால் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலன்பெறும்: ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் அவ்தீவ் தகவல்

35views

சென்னை – விளாடிவோஸ்க் (ரஷ்யா) கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டத்தின் மூலம் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலனடையும் என்று ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் தெரிவித்துள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டின் பலன்கள் குறித்து ‘இந்தியா- ரஷ்யா இடையேயான சிறப்பு கூட்டாண்மை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ரஷ்ய துணைத் தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் பேசியதாவது:

ரஷ்யாவுக்கு மிகவும் நம்பகமான நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் ஒரு அம்சமாக நடத்தப்பட்ட உச்சி மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் கல்வி, வர்த்தகம், எரிசக்தி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 28 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்திய – பசிபிக் கடல் பிராந்தியங்கள் விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. எனினும், அந்தப் பகுதியில் இரு நாடுகளும் இணைந்துதான் செயல்பட்டு வருகின்றன. அதற்கு சான்றாகவே சென்னை – விளாடிவோஸ்க் (ரஷ்யா) இடையேயான கடல்வழி போக்குவரத்து திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. இந்த வர்த்தக போக்குவரத்து மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். குறிப்பாக தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் அதிக பலன்களைப் பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் எம்.கணபதி பேசும்போது, ”உச்சி மாநாட்டின் ஒப்பந்தங்கள் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளன. இதனால் இருநாட்டு பாதுகாப்பு, பொருளாதார உறவுகள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறும்’ என்றார்.

`இந்து’ என்.ராம் பேசும்போது, ” சில முரண்பாடுகள் இருப்பினும் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து வலுவாகவே உள்ளது. அதேபோல், இந்தியா சீனாவுக்கு இடையே சில உரசல்கள் இருப்பினும் 1988-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் போடப்பட்ட ஒப்பந்தம் பிரச்சினையை கட்டுப்படுத்துகிறது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே சில பிரச்சினைகள் இருக்கும்போதும் இருதரப்புக்கான வர்த்தகம் 2021-ம் ஆண்டில் மட்டும் 100 பில்லியன் டாலர் மதிப்பை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி விஜேஷ் குமார் கார்க், டிரினிட்டி பத்திரிகை ஆசிரியர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!