‘டுவென்டி-20′ உலக கோப்பை தொடரை நடத்த சென்னை உட்பட 9 மைதானங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ‘டுவென்டி-20’ உலக கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ளன.
16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் பைனலை, நவ. 13ல் ஆமதாபாத்தில் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே உலக கோப்பை போட்டிகளை ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டில்லி, தரம்சாலா, ஐ தராபாத், கோல்கட்டா, லக்னோ, மும்பை என ஒன்பது மைதானங்களில் போட்டிகள் நடத்தலாம் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஐ.சி.சி., க்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து இறுதி முடிவு செய்ய ஐ.சி.சி., குழு வரும் 26ல் இந்தியா வரும் என நம்பப்படுகிறது. தவிர, பெருந்தொற்று காலத்தில் 16 அணிகளை வைத்து தொடரை நடத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால், இலங்கை மற்றும் எமிரேட்சில் உலக கோப்பை போட்டிகள் நடக்கலாம். அதேநேரம் உலக கோப்பை தொடருக்கு இன்னும் 6 மாதம் உள்ளன. இதற்குள் இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என பி.சி.சி.ஐ., எதிர்பார்க்கிறது. இதனால் உலக கோப்பை திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது என நம்புகிறது.