156
உறவில்லையென்றாலும் எப்போதாவது நிகழும் சந்திப்பில் புன்னகையோடு நலம் விசாரிப்பு இருக்கும் அந்த இருவர்களுக்கும் அவ்வளவுதான்.
அப்படியான ஓர்நாளில் வழக்கத்திற்கு மாறாக உரையாடல் வளர்ந்து,கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் தேவலாம் போல் இருந்திருக்கக்கூடும்.
அவர்கள் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்துக்கு கீழே கிடக்கும் இரண்டு குத்துக்கல் தோதாக இருந்திருக்கவே.அதில் அவர்கள் அமர்ந்திருந்த காட்சி அன்னோன்யத்தைக் கூட்டிக் காட்டியது.
குடும்பம், உறவுகள் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டார்கள் இருவருமே.
அடுத்தடுத்த பகிர்வுகளில் ஒருத்தியின் கண்கள் கண்ணீரில் மிதந்து வார்த்தைகள் தழுதழுத்து உதிர்ந்தது.
மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் ,எந்தவொரு ஆறுதலையும், தேற்றுதலையும் அவளுக்கு அளிக்கவேயில்லை.
வெறும் ம்ம்’ களிலும் தலையாட்டலிலும் ஆமோதிப்பவளாக மட்டும் தான் இருந்தாள்.
ஒருவழியாக எல்லாம் கொட்டித் தீர்த்தவள்
“ம்ம்…ஒரு சினிமாவே எடுக்கலாம் என் கதையை” என்ற வார்த்தைகளை வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னபோது ,கேட்டுக் கொண்டிருந்தவளின் மனதில் அவளின் கதை திரைப்படமாகவே ஓடிக் கொண்டிருந்தது.
இருவரும் விடைபெறும் போது,
ஒவ்வொருவருக்குள்ளும் கதை உண்டுதான் போல என்று தேற்றிக் கொண்டவர்களிடம் இன்னமும் மிச்சமிருக்கலாம் சொல்லக்கூடாதவையும்.
-
கனகா பாலன்
add a comment