158views
காரணமேயின்றி வம்பிழுக்கும் சாக்கில்
நீ என்னைப் புரிய மாட்டேங்கிற பார்த்தியா? “
இப்படித்தான் தொடங்குகிறது நாள்பட்ட அன்பில் கீறல் விழத் தொடங்கும் அந்த நேரம்.
இத்தனை காலம் இல்லாத இந்தக் கேள்வி ,இப்போது ஏனென்று ?” தொண்டை வரை வந்த வார்த்தைகளை சமாதியாக்கி அமைதியாக இருப்பதுகூட அவர்களுக்குச் சாதகம்தான்.
தவறுகள் கண்டுகொள்ளப்படாமல் வாழ்ந்த காலகட்டங்களை, நிறைய தடவை கடந்திருந்த அவர்களுக்குள் புரிதலுணர்வு பிசகிப் போகையில் “எடுத்ததுக்கெல்லாம் குற்றஞ்சாட்டி ஒருவரையொருவர் எதிரியாக பாவிக்கும் மனநிலையை அவ்வப்போது தொட்டு வருதல், சிலருக்கு சுவாரசியக் குளிர் காயலாகக்கூட இருக்கலாம்.
அங்கு மீண்டுமொரு பிணைப்பென்பதை கேள்விக்குறி தன் வசமாக்கிக் கொள்ளும்.காலம் அதன் இணையாகி பதிலுரைக்கும்.
உணர்ந்து கேட்கப்படும் மன்னிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது நிராகரிக்கப்படும் இடங்களில் எம்பி எம்பி மேலெழும் அன்பு புதையுண்டு போகவே தன்னை நிலை மாற்றும்.
விட்டுப் பிரிதலில் பிடிவாதமென்பது பிழையென்று தெரிந்தாலும் விட்டுவிடத் தோணாதவரின் முன் உள்ளங்கை கோர்த்திருந்த அன்பென்ன செய்யும் பாவம்..
ஒருவேளை திரும்பக் கிடைக்குமாயின்,சரிந்த மணல் வீட்டினை கையால் அணைத்துக் கொண்டிருப்பது போலத்தானே…
-
கனகா பாலன்
add a comment