நானும் சுபத்ராவும்…
இன்று தான் என் வாழ்நாளின் முதல் சிகரெட் புகைக்கிறேன். சுபத்ராவிற்கு அது பிடிக்கும் என்பதற்காக. அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக 3 வாரமாக தாடி வளர்க்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் நான் தாடி வளர்ப்பதை விரும்பவில்லை. ஃபேஷன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பதையும் ரகசியமாக செய்யவேண்டும்.
” நான் துபாய் போகாம இங்கியே இருந்திடப் போறேன்மா ”என்றேன்.
” ரொம்ப சந்தோஷம்டா ராஜு ” என்றார் அம்மா.
” ஏன் இந்த திடீர் முடிவு ” என்றார் அப்பா.
சுபத்ராவை பற்றி எதுவும் சொல்லவில்லை. ” சும்மா தான் ” என்று நழுவி விட்டேன்.
நான் ராஜ்குமார். சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை. என்னுடன் வேலை செய்த முருகன் துபாய் சென்றுவிட்டான். அந்த கம்பெனியில் ஒரு வேலை காலி இருப்பதை சொன்னான். பாஸ்போர்ட், விசா , டிக்கெட்டிற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். இந்த நிறுவனத்தில் ஒரு
மாதம் புதிதாக சேரும் நபருக்கு பயிற்சி கொடுத்துவிட்டு நான் கிளம்ப வேண்டியதுதான்.
புதிதாக ஒரு அழகான இளம்பெண் வந்து சேர்ந்தாள். அவள் தான் சுபத்ரா.அவள் அழகை வர்ணித்து வார்த்தைகளை விரயம் செய்வது வீண். அவள் பேரழகி. அவள் வந்த பின் ஒரு நாள் என்பது ஒரு நிமிடம் போல் சென்று விடுகிறது. அத்தனை ஆண்களும் அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டார்கள்.அவள் என் பக்கத்தில் உட்காருவதை நினைத்து பொறாமை கொண்டார்கள். பலர் propose செய்தார்கள். எல்லாருக்கும் நோ சொல்லிவிட்டாள்.
சில நாட்கள் போனது. பேசிக்கொண்டிருந்தோம்.
” வேளச்சேரில இருந்து தான் வரீங்களா ,சுபத்ரா ”
”ஆமாம் ராஜ், லேடிஸ் ஹாஸ்டல் இங்க இருந்து ரொம்ப பக்கம் ”
”அம்மா அப்பா ?”
”இல்ல” என்றாள் .
நான் அப்போது விளக்கம் எதுவும் கேட்கவில்லை.
பின்னர் ஒருநாள்,
” ராஜ் , ஒரு ரிக்வஸ்ட் என்னை ‘சுமி ‘ னு கூப்பிட முடியுமா ?” என்றாள்,
” ஏன் . சுபத்ராவை எப்படி சுருக்கினாலும் சுமி வராதே ”
” என்னோட அப்பா அப்படி தான் கூப்பிடுவார். உங்க குரல் அவரை ஞாபகப்படுத்துது ”
” அவரு எங்க இருக்காரு ”
” நான் பத்து வயசா இருக்கும்போது பிரிஞ்சுபோயிட்டார் எங்க போனார்னு தெரியாது ”
”அம்மா ?”
” அம்மா இறந்து 2 வருஷம் ஆகுது ”
” சாரி , சுமி ” என்றேன்.
கண் கலங்கினாள்.
” எனக்கு அப்பாவை ரொம்ப புடிக்கும். அவர் பேர் செண்பகராமன்.தேனில டெக்ஸ்டைல் பிஸ்னஸ். கொஞ்சம் நஷ்டம் ,கடன் ஆச்சு .அம்மா ,அவுங்க அண்ணன் ,தம்பி எல்லார் கூடவும் சண்டை ஆச்சு. போலீஸ் கேஸ்னு போச்சு. அப்பா ஒரு வருஷம் ஜெயில்ல இருந்தார். அதுக்கு அப்புறம் எங்களை வந்து பாக்கவே இல்ல” என்று சொல்லி முடித்தாள் .
இன்னொரு நாள். ” நீங்க துபாய் போயிடுவீங்களா ?” என்றாள்.
” ஆமா, ஏன் ?”
” உங்க கூடவே இருந்தா நல்ல இருக்கும்னு தோணுது ”
”ஏன் ?” என்றேன் .
” பிகாஸ் ” நீண்ட இடைவெளி ” ஐ ” நீண்ட இடைவெளி ” லவ் யூ ” என்றாள்.
” நானும் லவ் யூ சுமி. நீ ரொம்ப அழகா இருக்கே. நான் உனக்கு பொருத்தமா இல்லைனு தோணுச்சு அதான் நான் முன்னாடியே சொல்லல ” என்றேன்.
நாங்கள் நெருங்கினோம். எனக்குள் பல மாற்றங்கள் உணர்ந்தேன். கண் திறந்தாலும் கண்மூடினாலும் அவள் முகம் தெரிந்தது.Black & white காலத்து சினிமா நாயகி போல் எனக்கு பாசம் காட்டினாள்; பணிவிடை செய்தாள் ; பக்தி செலுத்தினாள்.
என் உலகம் மேலும் அழகானது.
பெரும்பாலும் அவள் அப்பாவைப் பற்றி அதிகம் பேசுவாள்.
” அப்பாவோட தாடி எனக்கு பிடிக்கும் , நீங்க தாடி வச்சா அழகா இருப்பீங்க ” என்றாள். நான் தாடி வளர்க்கத் தொடங்கினேன்.
ஒரு நாள் ஒரு காலி சிகரெட் அட்டையை எடுத்து வந்தாள். முகர்ந்து காட்டினாள்.
” அப்பா யூஸ் பண்ணதுல. இது ஒன்னு தான் என்கிட்ட இருக்கு. இதுல அப்பாவோட வாசம் இருக்கு.”
” நானும் இதே பிராண்ட் ஸ்டார்ட் பண்ணவா”
” ஸ்மோக் பண்ணுவீங்களா ”
” இது வரைக்கும் பண்ணது இல்ல ”
” ஒரு நாளைக்கு ஒன்னு மட்டும் பண்ணுங்க . என்கூட இருக்கும் போது மட்டும். ஸ்மோக் பண்ணிட்டு அதே வாசனையோட பக்கத்துல வந்து ரகசியம் மாதிரி பேசுங்க.”
” ஓகே சுமி , நாளைக்கு புதன்கிழமை. நல்ல நாள். நாளைக்கே ஸ்மோக்கிங் ஸ்டார்ட் பண்ணிடறேன் ”
”பல வருசமா எனக்கு சந்தோஷம் னு ஒரு வார்த்தை இருக்கிறதே மறந்து போச்சு . எங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். சிரிப்பு, புன்னகை இதெல்லாம் past tense வார்த்தைகள் . இப்போ அதுக்கு எல்லாம் சேர்த்து வைச்சு உங்க கூட இருக்கறது எனக்கு அவளோ சந்தோஷம் ”
”எனக்கும் அதே பீலிங் ,சுமி ”
மறுநாள் மாலை என் முதல் சிகரெட் புகைத்தேன். போதை ஏற்படுத்தாத , சுவை, வாசனை, தெரியாத சுவாரசியம் இல்லாத செயலாக சிகரெட் புகைப்பதை உணர்ந்தேன். சிகரெட் பிடித்து விட்டு அவளுடன் பேசிக்கொண்டு இருந்தேன். என் வாசனையை மிக நெருங்கி வந்து ரசித்தாள். என் தாடி மீது அவள் கன்னம், உதடுகள் உரசி எனக்குள் static electricity உற்பத்தி செய்தாள்.
மறுநாள் அந்த முக்கியமான – என் வாழ்வை மாற்றப்போகும் -அந்த விஷயத்தை சொன்னாள்.
” அப்பாவோட ஞாபகமா என்கிட்ட இன்னும் ஒன்னு இருக்கு . ஆனா அது பொருள் இல்லை ”
” என்ன அது ”
” எங்க அப்பா ஒரு பாட்டை அடிக்கடி பாடுவாரு , அதை பாடித்தான் என்னை தூங்க வைப்பாரு, வார்த்தைகள் மறந்துடுச்சு , டியூன் மட்டும் ஞாபகம் இருக்கு ”
” டியூன் பாடு , நான் பாட்டு தெரிஞ்சா சொல்றேன் ”
” லாலா லால் லல லாலா ,லாலே லல் லாலால. லல்லே லல லல்லாலே ”
” தமிழ் பாட்டா ? நான் கேட்ட மாதிரி இல்லியே , பழைய பாட்டா ”
” தமிழ் பாட்டு இல்ல , ஹிந்தினு நினைக்கிறன், வேற எதுவும் அப்பாகிட்ட இது பத்தி கேட்டது இல்லியே ”
” ஒரு வார்த்தை கூட ஞாபகம் இல்லியா ”
” நடுவுல ‘தில் ‘ ‘தீவானா ” இது மாதிரி வரும்னு நினைக்கிறேன் ”
”அப்போ 99% ஹிந்தி பாட்டுதான். 2 டேஸ் டைம் கொடு , எனக்கு ஹிந்தி தெரிஞ்ச பிரென்ட்ஸ் இருக்காங்க. கேட்டு பாக்கறேன் ”
” கண்டுபிடிச்சுட்டா , நான் ரொம்ப ஹேப்பி ஆயிடுவேன் ராஜ் , உங்க குரல்ல ரெக்கார்ட் பண்ணி கொடுங்க. அதை டெய்லி கேட்டுட்டே இருப்பேன். அதை மட்டும் பண்ணி தந்துடுங்க ராஜ் ”’
” அதான் உங்க family song ஆ , இரு என்னோட போன்ல அந்த டியூன் ரெக்கார்ட் பண்ணிக்கறேன், ம்ம் பாடு ”
பாடினாள். பதிந்து கொண்டேன், ஹிந்தி பேசும் நண்பர்களுக்கு அனுப்பி கண்டுபிடிக்க சொன்னேன்.
ஒரு வாரம் கடந்த பின்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
என் பள்ளி நண்பன் ரமேஷ், ஒரு நாள் போன் செய்தான்.
” எங்க அப்பாவுக்கு தெரியாத ஹிந்தி பாட்டே கிடையாது, அவர்கிட்ட கேட்டேன். டியூன்ல தப்பு இருக்கும்னு சொல்றாருடா, முடிஞ்சா உன்னை வீட்டுக்கு வர சொன்னாரு, வந்து பேசிப்பாக்கிரியா”
சென்ட்ரல் அருகில் இருந்த அவன் வீட்டிற்கு ஒரு ஞாயிறு மாலை சென்றேன், உதாரண குஜராத்தி குடும்பம்.
ரமேஷ் , அவன் அப்பா. அவன் தாத்தா மூவரும் அமர்ந்து தின்பண்டங்களை தின்று கொண்டிருந்தார்கள்.
தாத்தா விடம் முதுமை தெரியவில்லை. அவன் அம்மாவும் பாட்டியும் சமையல் அறையில் இருந்து வித விதமாக பண்டங்களை செய்து எடுத்து வந்தார்கள். அவர்களுக்கு ‘நமஸ்தே’ சொல்லிவிட்டு நானும் அந்த நொறுக்குகளை சுவைத்தேன்.
ரமேஷின் அப்பா ஒரு அறையை காட்டினார், அது முழுவதும் கிராமபோன் , ரிக்கார்ட் ப்லயேர் , கேசட் ப்லயேர், டேப் ரிக்கார்டர் , சீடி , டிவிடி ப்லயேர்கள் . விதவிதமான ரேடியோக்கள்.கேசட்கள். பாட்டு புத்தகங்கள் எல்லாம் வைத்திருந்தார், தீவிர இசை ரசிகர்.
” தமிழ் பாட்டு எல்லாம் கேக்க மாட்டிங்களா ” என்றேன்.
” இல்லப்பா, ஹிந்தி பாட்டுக்கேட்டே பழகிட்டேன். வேற பாஷை கேக்க நேரம் கிடைக்கல.ஒரு முறை அந்த டியூன் போட்டு காட்டு” என்றார். play செய்தேன்.
” இந்த மாதிரி ஒரு ஹிந்தி பாட்டே கிடையதுப்பா. ஏதோ தப்பான டியூன்னு நினைக்கிறன்”.
” சரி விடுங்க அங்கிள் ரொம்ப தேங்க்ஸ் நான் போய்ட்டு வரேன் ”
” தம்பி , அந்த பாட்டு மறுபடியும் போடு ” என்றார் தாத்தா .
போட்டேன் .
தாரே ரார் ராரே , என்று ஹம் செய்து விட்டு யோசித்தார் தாத்தா ,
” நைனே நேன் மலே ஜியான் சானா தே பண்ணே தில் தீவானா , தம்நெ பர்க்க மானுக்கே மானு பொத்தானா”
என்று பாடினார் ,
” தம்பி ,இது ஹிந்தி இல்ல , குஜராத்தி பாட்டு , உன்னிஸ் சோ திரசாத்ல அதாவது 19 63ல அகந்து சவுபாக்யவதினு ஒரு படம் வந்துச்சு அதுல வர பாட்டு , முகேஷ் பாடின பாட்டுப்பா. பிரமாதமான சிங்கர்ப்பா அவுரு ”
” வாவ் , சூப்பர் தாத்தா , ரொம்ப தேங்க்ஸ் ”
” அதானே பாத்தேன் , ஹிந்தினா நிச்சயம் எனக்கு தெரிஞ்சு இருக்கும்” என்றார் ரமேஷ் அப்பா.
” இந்த பாட்டுக்கு பின்னாடி ஒரு கதை இருக்குப்பா. என்னோட தோஸ்த் கூட நான் சூரத் போனோம் , அவன் கூட அவர் மகன் வந்திருந்தான். 10 வயசு பையன் . பர்ச்சேஸ் முடிச்சுட்டு லாரில புக் பண்ணிட்டோம் , 2 நாள் ட்ரெயின் இல்ல . அப்போ தியேட்டர் போயி இந்த படம் பாத்தோம். அந்த குட்டி பையனுக்கு இந்த பாட்டு ரொம்ப புடிச்சு போச்சு , இதையே பாடிட்டு இருப்பான். நல்லா பாடுவான் ”
” தாத்தா , அந்த குட்டி பையன் பேரு செண்பகராமனா ”என்றேன் .
அவர் அதிர்ச்சியில் உறைந்தார். நீண்ட மௌனம் .
” உனக்கு அவனை தெரியுமா ?”
” அவர் பொண்ணு என்னோட ஒர்க் பண்றா . அவங்க அப்பாவை தேடிட்டு இருக்கா. நீங்க கடைசியா அவரை எப்போ பார்த்தீங்க ”
” 15 வருஷம் முன்னாடி. நான் தான் சூரத்ல இன்னொரு தோஸ்த் கிட்ட வேலைக்கு சேர சொல்லி அனுப்பி வச்சேன் ”
அவரிடம் விபரங்கள் வாங்கிக்கொண்டேன். சுபத்ராவுக்கு
”ஒரு வாரம் காத்திரு , surprise gift உடன் வருகிறேன் ” மெசேஜ் செய்தேன். சூரத் கிளம்பினேன்.
ரயிலில் சூரத் வந்தடைந்தேன், தாத்தா தந்த முகவரி வைத்துக்கொண்டு பலரிடம் விசாரித்தேன்.
ஒருவர் ” நீங்க தமிழா ” என்றார்.
” ஆமாங்க , செண்பகராமான்னு ஒருத்தரை தேடிட்டு இருக்கேன் ”
” நீங்க அவருக்கு என்ன உறவு ”
” அவர் பொண்ணோட friend .”
” பொண்ணா ? ”
” ஆமாங்க , அவர் பொண்ணு பேரு சுபத்ரா ”
” சுமி எப்படி இருக்காப்பா , எங்க இருக்கா ”
” சார் , நீங்களா ”
” நான் தான் செண்பகராமன். வீட்டுக்கு போயி பேசலாம் ”
வீடு சென்றோம்.
” இவங்க என்னோட மனைவி ”
வேறு ஒரு பெண்மணி இருந்தார்.
”ரத்தன் லால் கிட்ட வேலைக்கு சேர்ந்தேன், அவர் பொண்ணையே எனக்கு கட்டி கொடுத்துட்டாருப்பா. குழந்தை இல்லை. இவ பேர் ஊர்மிளா . என்னோட முதல் மனைவி நிர்மலாவை
விட பெரிய கொடுமைக்காரிப்பா , நம்ம தலைல இதுதான்னு எழுதிட்டான் போல இருக்கு, வேற வழி இல்லாம காலத்தை ஓட்டிட்டு இருக்கேன் ”
” சார் , என்கூட சென்னை வர முடியுமா , சுமி உங்களை ரொம்ப தேடிட்டு இருக்கா ”
” இல்லப்பா . தமிழ் நாட்டுக்கு நான் வரது இல்லேனு ஒரு வைராக்யத்தோட இருக்கேன். எனக்கும் அவளை பாக்கணும் ரொம்ப ஆசை. அவ கிட்ட மன்னிப்பு கேக்கணும். பாவம் அந்த பொண்ணு ”
” ஓகே சார் , நான் உங்களை மறுபடியும் வந்து பாக்கறேன் ” என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்னை வந்தேன் .
சுபத்ராவிடம் எல்லா விவரங்களையும் சொன்னேன் .
” ராஜ் , இப்போ வரைக்கும் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இனிமேல் நீங்க தான் என்னோட கடவுள் ” என்று சொல்லிவிட்டு சந்தோசத்தில் அழுதாள்.
எனக்கு லீவ் கிடைக்கவில்லை . சுபத்ரா மட்டும் இம்முறை சூரத் கிளம்பினாள். அவளுக்கு விவரமாக மேப் போட்டு கொடுத்தேன், தினமும் போனில் பேசினோம். அவள் அப்பாவை சந்தித்து பேசுவது , உடன் இருப்பது எல்லாவற்றையும் சொன்னாள் .
ஒருவாரம் சென்ற பிறகு,
” அப்பாவோட நிலைமையை நினைச்சா ,ரொம்ப கஷ்டமா இருக்கு ராஜ். சித்தி அவரை ரொம்ப டார்ச்சர் பன்றாங்க . என்னை தனியா விட்டுட்டு போயிடாத சுமினு ஒருநாள் என்னோட கைய புடிச்சுட்டு அழுதார் தெரியுமா . எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு , சென்னைக்கு அவரை சித்தி அனுப்ப முடியாதுனு சொல்லிட்டாங்க. அவங்களுக்கும் டிப்ரெஷன் , அப்பா தான் ஒரே துணை. அப்பாவுக்கும் ஒரே ஆறுதல் நான் தான். ”
”அவங்க நிலைமையும் பாவம் தான் ”
”நான் இங்க இருக்கறதும் சித்திக்கு பிடிக்கல. எப்போ ஊருக்கு போக போறேன்னு நேரடியாவே கேட்டாங்க ”
”ம்ம் ”
” அப்பா என்கிட்ட ஒரு ஐடியா சொன்னாரு ”
”என்ன சொன்னாரு ”
” அதை எப்படி சொல்றதுன்னு தெரியல. ராஜ் ”
”பரவாயில்ல, தயங்காம சொல்லு ”
”ஊர்மிளாசித்தியோட அண்ணன் மகன், இப்போ அப்பாவோட பிஸ்னஸ் பார்ட்னர். அவனை நான் கல்யாணம் பண்ணிட்டா அவங்க கூடவே இருந்துடலாம்னு சொன்னாரு ”
”நீ என்ன முடிவு சொன்ன , சுமி ”
” நான் இன்னும் எந்த முடிவும் சொல்லல ராஜ் ”
அவள் குரலில் அழுகை தெரிந்தது. எனக்கும் கண்ணீர் வந்தது.ஒருமாத எதிர்பார்ப்பை ஒருநொடியில் சிதைக்கும் ஏமாற்றம்.
சுமி தொடர்ந்தாள். ” நான் உங்களை நேசிச்சது 100% உண்மை. நீங்க என்னோட கடவுள் மாதிரி. ஆண்டாள், மீரா இவங்களுக்கு கண்ணன் எப்படி இருந்தானோ அதே மாதிரி ஒரு டிவைன் லவ் ”
” கஷ்டப்பட்டு வார்த்தைகள தேடித்தேடி பேசாத சுபத்ரா, அது நமக்கு செட் ஆகாது. எனக்கு உன்னோட நிலைமை புரியுது. நீ கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்த வாழ்க்கை கிடைக்கும் போது தவற விடாத. என்கிட்ட கேட்டு இருந்தாலும் இந்த முடிவை தான் சஜஸ்ட் பண்ணி இருப்பேன். லவ் ப்ரபோஸ் பண்றதும் , லவ் பிரேக் அப் ஆகறதும் இயல்பான விஷயம் தான். எனக்கு வருத்தம் எதுவும் இல்ல. practical ஆ முடிவு எடு. அதுல தப்பே இல்ல. ” என்றேன்.
சுபத்ராவை மறக்க , மனதை திசை திருப்ப முயற்சி செய்து கொண்டிருந்தேன். அவள் அவ்வப்போது போன் செய்து சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்தாள். அவள் என்னை ஏமாற்றிய குற்றஉணர்ச்சியில் இருப்பது புரிந்தது .
பின்னொரு நாள் அலைபேசினாள்.
”ராஜ் , நீங்க என்னோட வாழ்க்கைல சும்மா கடந்து போறவரா இருக்க கூடாது. முக்கியமான உறவா இருக்கணும்னு ஆசை படறேன் ”
” எப்படி நடக்கும் ”
” எனக்காக ஒரு ஸ்பெஷல் டைம். ஒரு தனிமையான இரவை எனக்கு பரிசா கொடுங்க. என்னோட வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும் ”
” அப்படினா ”
” நீங்களும் நானும் மட்டும் ஒரே அறையில ஒரே இரவுல வாழனும் ”
”இது சாத்தியம் இல்ல ,சுபத்ரா .வீண் பிரச்சனை ”
”உங்களுக்கு விருப்பம் இருந்தா , இந்த பரிசை எனக்கு கொடுங்க ”
”சரி சுபத்ரா. லெட்’ஸ் டூ இட் ”
ஒரு ஓட்டல் அறையில் ஒரு இரவு ஒன்றாக கழிக்க முடிவு செய்தோம்.சரியா தவறா என்ற குழப்பம் என்னை விடாமல் கேள்வி கேட்டபடி இருந்தது. முடிவு செய்துவிட்டேன் . அந்த அந்த நிமிடத்து நியாயங்கள் தானே வாழ்க்கையை தீர்மானிக்கிறது .
இரண்டு வாரங்களுக்கு பிறகு சூரத் கிளம்பினேன். பயணித்தேன். வந்தடைந்தேன்.லக்கேஜை பாதுகாப்பு அறையில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். நான் சொன்னபடி டேக்சி அருகில் சுபத்ரா காத்திருந்தாள்,
அதே புன்னகை மாறாத முகம். இன்னும் அழகாக இருந்தாள். அதிக மகிழ்ச்சியுடன் காணப்பட்டாள்.
டேக்சி ஏறி உணவகம் சென்றோம், இரவு உணவை உண்டோம்.
ஏற்கனவே புக் செய்த ஓட்டல் அறை சென்றோம். சிறிது நேரம் டீவி பார்த்தோம்.
” எனக்கு சில பொருட்கள் வாங்கணும், வாங்கிட்டு வரேன். தூங்கிடாதே ”
”சரி , தூங்கமாட்டேன் ,வெயிட் பண்றேன் ” என்றாள் .
” உங்க வீடு இங்க இருந்து பக்கமா ?”
”கொஞ்சம் தூரம் ”
” உனக்கு இங்க இருந்து வீட்டுக்கு போக வழி தெரியுமா ?”
” தெரியும் ” என்றாள் .
” சரி ,தூங்காம வெயிட் பண்ணு , கடைக்கு போய்ட்டு வரேன் ”
” நோ ப்ரப்ளம் . மெதுவா வாங்க அவசரம் இல்ல ”
வெளியில் வந்தேன். டேக்சி ஏறினேன். ரயில் நிலையம் வந்தேன். லக்கேஜை பெற்றுக்கொண்டேன்.
மும்பை செல்லும் ரயில் ஏறினேன். போனை Off செய்தேன்.5 மணி நேரம் கடந்து அதிகாலையில் மும்பை வந்தடைந்தேன்.
ரயில் நிலையத்தின் தங்கும் அறையில் என் ஒரு மாத தாடியில் இருந்து விடுதலை பெற்றேன். போனை on செய்தேன் .அம்மா .அப்பாவிடம் போனில் பேசினேன்.அதன் பின் சுபத்ராவிற்கு மெசேஜ் டைப் செய்தேன்
” ஹாய் சுபத்ரா , குட் மார்னிங், நான் உன்கிட்ட சொல்லாம ஓடி வந்ததுக்கு காரணம் இருக்கு. நான் அதுக்கு உடன்பட்டிருந்தா சில நாட்களுக்கு அப்புறம் உனக்கு குற்றம் செஞ்ச உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கு .
நீ கடவுளா நினைச்ச ஒருத்தன் – உன்னோட அப்பாவை ஞாபகப் படுத்தின ஒருத்தன் உன்னோட பலவீனத்தை
பயன்படுத்திட்டானு நினைக்க வாய்ப்பிருக்கு. நீ மறக்க விரும்பற ஒரு நிகழ்வா அது அமைஞ்சிருக்கும் .
நீ முதல் தடவை சொன்னப்பவே நான் ஏன் மறுக்காம, ஒத்துக்கிட்டேன் தெரியுமா ? அப்பவே நான் மறுத்திருந்தா இப்படிப்பட்ட உத்தமனுக்கு துரோகம் பண்ணிட்டோமேனு நீ வருத்தப்பட்டிருப்ப .
நீ உன்னோட அப்பாவிற்காக வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கறதுல எனக்கு வருத்தம் இல்லை.
நீ என்னை விட்டுப் போகல. நான் தான் உன்னை இரவு முழுக்க காத்திருக்கவச்சு ,ஏமாத்திட்டு ,சொல்லாம நான் ஆசைப் பட்ட வெளிநாட்டுக்கு ஓடிட்டேன் .
நீ மறக்க நினைக்கற இன்பமா இருக்கறத விட மறக்கமுடியாத ஏமாற்றமா இருந்துட்டு போறேன். ஏமாத்தறது என்னோட நோக்கம் இல்லை. நீ மறக்ககூடாதுனு விருப்பம்.
நான் செஞ்சது தப்பு தான். ஆனா தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடாத .
Bye ,take care ”
டைப் செய்து முடித்து send செய்தேன். அவள் அதை உடனே பார்த்திருக்க வேண்டும்.
சுபத்ரா Typing…. என்று காட்டியது.
அவள் பதிலை பார்க்காமல் போனை திறந்து சிம் கார்டை எடுத்து உடைத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு என்னிடம் இருந்த கடைசி சிகரேட்டையும் அதில் போட்டுவிட்டு துபாய் செல்லும் விமானத்தைப் பிடிக்க ஆயத்தம் ஆனேன்.
[ THE END ]