சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை வருகை: உதகையில் 3 நாட்கள் ஓய்வெடுக்கிறார்
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆக.2-ம் தேதி சென்னை வருகிறார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக கடந்த 18-ம் தேதி டெல்லி சென்றமுதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசினார்.அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற குடியரசுத் தலைவர், விழாவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டார்.
அதன்படி, 5 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வரும் ஆக.2-ம் தேதி தமிழகம் வருகிறார். அவரது தமிழக பயணத் திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ஆக.2-ம் தேதி காலை 9.50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு 12.45 மணிக்கு சென்னை வந்து சேர்கிறார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கிண்டி ராஜ்பவனுக்கு செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு மதிய உணவை முடித்து சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகிறார். மாலை 5 முதல் 6 மணிவரைநடக்கும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, பேரவை அரங்கில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.
அன்றிரவு ராஜ்பவனில் தங்கும் குடியரசுத் தலைவர், மறுநாள் (ஆக.3) காலை உணவு முடித்த பின், சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானத்தில் கோவை செல்கிறார். சூலூர் விமானப்படை தளத்தில் இறங்கி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் உதகை செல்கிறார். உதகை ராஜ்பவனில் தங்கி 3 நாள் ஓய்வெடுக்கிறார். இதனிடையே, ஆக. 4-ம்தேதி காலை 10.20 மணிக்கு வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகல்லூரியை பார்வையிடுகிறார். 6-ம் தேதி காலை உதகையில்இருந்து ஹெலிகாப்டரில் சூலூர்விமானப்படை தளம் வரும் குடியரசுத் தலைவர், அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
குடியரசுத் தலைவரின் பயணத் திட்டம் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கான பாதுகாப்புப் படை அதிகாரிகள் விரைவில் சென்னை வந்து பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் தமிழகம் வருவது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி சென்னை, கோவை மற்றும் உதகையில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல்ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.