தமிழகம்

கோமியம் குடிக்க வைத்து சித்ரவதை; பெண் மருத்துவர் தற்கொலை; கணவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

65views

பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில், அரசு மருத்துவரான அவரது கணவர், மாமியாருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையைசென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்து தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிபவர் மரியானோ ஆண்டோ புரூனோ(36). இவருக்கும், கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த அமலி விக்டோரியாவுக்கும்(32) கடந்த 2005-ல் திருமணம் நடைபெற்றது.

ஒரு வருடம் வரை குழந்தை இல்லை என்பதால், பூஜைகள் நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வைத்துள்ளனர். பின்னர், கூடுதலாக வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த 2007-ல் அமலிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பின்னர், அமலி விக்டோரியா பெயரில் இருந்த சொத்துகளை தங்களது பெயரில் எழுதி வைக்குமாறு கூறி, கணவர் வீட்டார் அமலியை சித்ரவதை செய்துள்ளனர். அமலி 2-வது முறையாக கர்ப்பமடைந்தபோது, அவரது கர்ப்பம் கலைந்துள்ளது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அமலி விக்டோரியா, 2014 நவம்பர் 5-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் மரியானோஆண்டோ புரூனோ, அவரது தாயார்அல்போன்சாள், தந்தை ஜான் பிரிக்ஸ் ஆகியோர் மீது அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், அமலியின் கணவர் மற்றும் மாமியாருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும், மாமனாரை விடுவித்தும் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மரியானோ ஆண்டோ புருனோ, அவரது தாய் அல்போன்சாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல்குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.சுகேந்திரனும், தற்கொலை செய்து கொண்ட அமலியின் பெற்றோர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சங்கரும் ஆஜராகி வாதிடும்போது, ‘ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை கொண்ட மருத்துவர் புரூனோ குடும்பத்தினர், ஆரம்பத்தில் குழந்தை இல்லை என்பதற்காக வீட்டில் பூஜைகளை நடத்தி, அமலியை கோமியம் குடிக்க வைத்துஉள்ளனர். 2014-ல் அவரது கர்ப்பம் கலைந்துள்ளது. அவரை மீண்டும் சித்ரவதை செய்துள்ளனர். இதனால்தான் மருத்துவர் அமலி தற்கொலை செய்துள்ளார்’ என்றனர்.

மனுதாரர்கள் தரப்பில், ‘அமலியின் தற்கொலைக்கும், மனுதாரர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததால், தற்கொலை செய்து கொண்டார்’ என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், ”இந்த வழக்கில் அனைத்து சாட்சிகளையும் தீர ஆராய்ந்த பின்னரே, விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நன்றாகப் படித்து, மனநல மருத்துவத்தில் தங்கப் பதக்கம் பெற்ற பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குச் சென்றுள்ளார் என்றால், பிரச்சினையின் தீவிரத்தை உணர முடிகிறது.

எனவே, அவரது மரணத்துக்கு காரணமானவர்களுக்கு கீழமை நீதிமன்றம் அளித்துள்ள 7 ஆண்டு சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்கிறது. எனவே, அவர்கள் இருவரையும் சிறையில் அடைக்க வேண்டும்’ என்றுகூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!