தமிழகம்

கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை வழக்கு: யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை?- இன்று அறிவிப்பு

55views

சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ், 2015 ஆம் ஆண்டு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இந்த ஆணவக்கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்று இன்று நீதிபதி உத்தரவிட உள்ளார்.

ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் நட்பாக பழகினர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.

நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது. சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் மாறினாலும்..வரலாற்று சிறப்பான தீர்ப்பு -அரசு வழக்கறிஞர் மோகன்

சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி.விஷ்ணுப்ரியா, திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணையும் நடைபெற்றது. அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வக்கீலாக மதுரை ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜுவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர்.

இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல்ராஜின் தோழி திடீரென பிறழ் சாட்சியானார். இதேபோல் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கின் போக்கையே மாற்றின. அரசு தரப்பு வழக்கறிஞராக, சீனியர் வழக்கறிஞர் ப.பா.மோகனை நியமிக்க வேண்டும் என அப்போதைய நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம், சந்தியூர் வக்கீல் பார்த்திபன் மூலமாக மனு கொடுத்தார். அந்த மனு கிடப்பில் போடப்பட்டதால், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சித்ரா.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கருணாநிதியை விடுவித்து விட்டு, அரசு வழக்கறிஞராக ப.பா.மோகனை நியமித்து உத்தரவிட்டது. இதை தமிழக உள்துறைச் செயலாளரும் அரசாணை மூலம் உறுதிப்படுத்தினார். இந்த உத்தரவு வந்த போது நாமக்கல் நீதிமன்றத்தில் 72 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 மே 5ஆம் தேதி முதல் இந்த வழக்கு, மதுரை எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். பலர் பிறழ் சாட்சிகளாக மாறினாலும் இந்த வழக்கில் சிசிடிவி முக்கிய சாட்சியமாக இருந்தது. வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கில் கடந்த 5 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆகியுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அருண், குமார், சங்கர், அருள் வசந்தம், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித் ஆகியோரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ், சந்திரசேகர், பிரபு, ஸ்ரீதர், சுரேஷ் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. முதல் குற்றவாளியான யுவராஜூக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!