தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதி வழங்குவதாக அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ஆவது அலை தீவிரமாக மிகவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் போராடி வருகின்றன. கடுமையான கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை. சில நாட்களில் சொற்ப அளவில் பாதிப்பு குறைந்தாலும் மீண்டும் பெரியளவில் உயர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை காணப்படுகிறது. இதேநிலை தான் அரியானா மாநிலத்திலும் நிலவுகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்கள் குவிந்து வருகின்றனர். பெட்கள் நிரம்பிவிட்டதால் மையங்கள் அமைக்கும் பணி துரிதமாக உள்ளது.
இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் அல்லது ஐ.சி.யூ ஆதரவில் சிகிச்சை பெற்று வரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ உதவிக்காக நாளை ஒன்றுக்கு ரூ .5,000 வீதம் ஏழு நாட்களுக்கு ரூ.35,000 மருத்துவ உதவி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. மேலும் நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.