வெளிநாட்டு பயணியர் இந்தியா வரும் முன், ‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் புதிய வகை ‘ஒமைக்ரான்’ வைரஸ், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால், தொற்று பாதிப்பை தீவிரமாக கண்காணிக்க, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், வெளிநாட்டு பயணியர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சர்வதேச பயணியருக்கு புதிய கொரோனா வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதன்படி, இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமான பயணியர், பயணம் செய்வதற்கு முன், 14 நாட்கள் பயணித்த விபரங்களுடன், www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் சுய உறுதி அளிக்க வேண்டும்.இதேபோல, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.தாங்கள் கூறும் விபரங்கள் தவறானது எனில், குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சுய ஒப்புதல் அளிக்க வேண்டும். இதில் இருந்து, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், அவர்களுக்கு சோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.