கொரோனா உயிரிழப்பு தரவுகளை திருத்தி அமைக்கும் மகாராஷ்டிரா.. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிரா தனது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை அப்டேட் செய்து வருகிறது, இதனால் அங்கு கொரோனா உயிரிழப்பு 8,800 முதல் 1.08 லட்சம் வரை அதிகரித்துள்ளது,
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு இருந்தது. இதில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. அங்கு முழு ஊரடங்கிற்கு இணையான 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட பிறகே கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்களை அம்மாநில அரசு அப்டேட் செய்து வருகிறது. அதாவது கடந்த காலங்களில் கொரோனா உயிரிழப்புகள் ஏதேனும் மிஸ் ஆகியிருந்தால், அதைச் சேர்த்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா உயிரிழப்புகள் 8,800 முதல் 1.08 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி அம்மாநில அரசு இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை மொத்தம் 483 பேர் கொரோாவால் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அறிவித்தது அதில் 284 பேர் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள். அதேபோல 199 பேர் கடந்த ஒரு வாரத்தில் உயிரிழந்தவர்களாகும்.
இருப்பினும், உயிரிழப்புகளில் பழைய எண்ணிக்கையைச் சேர்த்து வெளியிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். இதையடுத்து கொரோனாவால் முன்பு உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் தனியாக வெளியிடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பு 15 நாட்களுக்கு ஒரு முறை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.