விளையாட்டு

கோப்பை வென்றது சீனா: ஆசிய கால்பந்தில் ஆதிக்கம்

41views

பெண்களுக்கான ஆசிய கால்பந்தில் சீன அணி கோப்பை வென்றது. பைனலில் 3-2 என, தென் கொரியாவை தோற்கடித்தது.

இந்தியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 20வது சீசன் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் சீனா, தென் கொரியா அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் தென் கொரிய அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட சீன அணிக்கு டாங் ஜியாலி (68வது நிமிடம்), ஜாங் லின்யான் (72வது), ஜியாவோ யூயி (90+4வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஆட்டநேர முடிவில் சீன அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 9வது முறையாக (1986, 1989, 1991, 1993, 1995, 1997, 1999, 2006, 2022) கோப்பை வென்றது. முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்த தென் கொரிய அணிக்கு 2வது இடம் கிடைத்தது.

இத்தொடரில் காலிறுதியில் தோல்வியடைந்த வியட்நாம், சீனதைபே, தாய்லாந்து அணிகள் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெறும் ‘பிளே-ஆப்’ சுற்றில் மோதின. இதில் அபாரமாக ஆடிய வியட்நாம் அணி, தாய்லாந்து (2-1), சீனதைபே (2-1) அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, உலக கோப்பையில் விளையாட தகுதி பெற்றது.

இதுவரை ஜப்பான், தென் கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் என, 5 ஆசிய அணிகள் உலக கோப்பைக்கு தகுதி பெற்றன. தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!