கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டிய பருவமழை தொடங்கும் என முன்னர் கூறப்பட்டிருந்த நிலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக மழை பொழிவு கொண்ட தென்மேற்கு பருவமழை, ஜூன் ஒன்றாம் தேதி கேரளாவில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே மழை தொடங்க வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தற்போது கூறியுள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று ஜூன் ஒன்றாம் தேதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூன் 3ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெய்யும் மழை அளவில், 70 சதவிகிதம் தென்மேற்கு பருவமழையாகும். தென்மேற்கு பருவமழையின் போது, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்யும். தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக மழை பெய்யும்.