இந்தியா

கேரளாவில் மீண்டும் இடதுசாரி ஆட்சி: மேலும் ஒரு கருத்துக் கணிப்பில் தகவல்

80views

கேரள மாநிலத்தில் இடதுசாரி அணி மீண்டும் ஆட்சியைக் கைபற்றும் என மலையாள மனோரமா மற்றும் விஎம்ஆர் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு கடந்த 29-ம் தேதி வெளியானது. அதில் ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை அறிவித்தன. இதில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 2-ம் முறையாக ஆட்சியை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் அணி இந்த முறையும் எதிர்க்கட்சியாக அமர முடியும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்தநிலையில் மலையாள மனோரமா மற்றும் விஎம்ஆர் நிறுவனம் கடந்த 2 நாட்களாக தொகுதி வாரியாக 140 இடங்களுக்கும் கருத்துக் கணிப்பை வெளியிட்டது. தேர்தலுக்கு பிந்தையக் இந்த கருத்துக் கணிப்பின் இறுதி முடிவுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதிலும் ஆளும் இடதுசாரி அணியே ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி அணி 74 இடங்களில் வெல்லும் எனவும், காங்கிரஸ் அணி 64 தொகுதிகளை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்றாவது அணியாக களம் கண்ட பாஜக அணி 2 இடங்களில் மட்டும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்சார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பி.சி.தாமஸ் வெற்றி பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!