கேரளாவில் கனமழை பெய்துவருவதால் சபரிமலை கோயிலுக்கு செல்ல, வரும் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அனுமதியை ரத்து செய்து அம்மாநில வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
துலா மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில், கடந்த 16 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. ஆனால் அன்று பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, அக்-17 ஆம் தேதி முதல் 21 -ம் தேதி வரை சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக, ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள பம்பையாறு உட்பட பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந் துள்ளது. மழை எச்சரிக்கை மேலும் விடுக்கப்பட்டுள்ளதால், அய்யப்பன் கோயில் தரிசனத் திற்கு அளிக்கப்பட்ட அனுமதியை, வரும் 21 வரை ரத்து செய்வதாக அம்மாநில அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.