கள்ளக்குறிச்சி வன்முறை: கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைப்பெற்ற போராட்டத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். காவலர்கள் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
அதுமட்டுமின்றி, பள்ளி வாகனங்கள், மேஜை , நாற்காலி, மாணவர்களின் சான்றிதழ் ஆகியவற்றை தீ வைத்து எரித்தனர். இதில் கிட்டத்தட்ட 67க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது, வன்முறையில் ஈடுப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் உடலானது இரு முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக காவல்துறையானது சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்துள்ளது.
அதன்படி, கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் தடயவியல் துறையினர் 3வது நாளாக ஆய்வு நடத்தி வருகின்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கைரேகை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகம், வகுப்பறைகள், மாணவி இறந்து கிடந்த இடம், பள்ளி தாளாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கலவரத்தின் போது எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்கள், பள்ளி பேருந்துகளில் தடயங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.