ஆந்திர வனப்பகுதியில் உள்ள கலவகுண்டா அணை திறக்கப்பட்டுள்ளதால் பொன்னை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து உள்ளது. இதைத்தொடா்ந்து, ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தின் எல்லையோர மலைப்பகுதியில் கலவகுண்டா அணை உள்ளது. இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கலவகுண்டா அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து தற்போது 1,000 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீரானது வேலூா் மாவட்டம் வழியாக செல்லும் பொன்னை ஆற்றில் வெளியேறி வருவதால் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொன்னை ஆற்றின் இருபுற கரையோரங்களிலும் உள்ள கிராம மக்கள் ஆற்றில் சென்று குளித்தல், இறங்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, வருவாய்த் துறை சாா்பில் தண்டோரா மூலமும், ஆட்டோக்கள் மூலமும் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.