கம்ப்யூட்டர் ஊடுருவல்களால் சமூக பாதிப்பு; ஜனநாயக மதிப்புகளை அழிக்கக்கூடாது: பிரதமர் மோடி வலியறுத்தல்
கம்ப்யூட்டர் ஊடுருவல்களால் சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன, ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்தும் வழியாக கம்ப்யூட்டர் தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
ஜி7 உச்சி மாநாட்டின் 2வது நாளில் நடந்த ‘ஒன்றாக மீண்டும் கட்டமைத்தல் – திறந்தவெளி சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் மீண்டும் பசுமையை உருவாக்குதல், பருவநிலை மற்றும் இயற்கை’ என்ற தலைப்புகளில் நடந்த இரண்டு அமர்வுகளிலும் பிரதமர் ரேந்திர மோடி பங்கேற்றார்.
திறந்தவெளி சமூகங்கள் என்ற தலைப்பிலான அமர்வில், முன்னணி பேச்சாளராக அழைக்கப்பட்ட பிரதமர், இந்தியாவின் நாகரீக நெறிமுறைகளில் ஜனநாயகமும், சுதந்திரமும் ஒரு அங்கமாக உள்ளன என நினைவுப் படுத்தினார். தவறான தகவல்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஊடுருவல்களால், சமூகங்கள் பாதிக்கப்படுகின்றன என பல தலைவர்கள் தெரிவித்த கவலையை அவரும் பகிர்ந்து கொண்டார். ஜனநாயக மதிப்புகளை மேம்படுத்தும் வழியாக கம்ப்யூட்டர் தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதை அழிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜனநாயகமற்ற மற்றும் சமநிலையற்ற உலகளாவிய அரசு அமைப்புகளை சுட்டிக் காட்டிய பிரதமர், திறந்தவெளி சமுதாயங்களின் உறுதிப்பாட்டின் சிறந்த அடையாளமாக பலதரப்பு முறையில் சீர்திருத்தம் வேண்டும் என அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தின் இறுதியில், திறந்தவெளி சமுதாயங்களுக்கான அறிக்கையை தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பருவநிலை மாற்றம் குறித்த அமர்வில், அரைகுறையாக செயல்படும் நாடுகளால் பூமியின் வளிமண்டலம், பல்லுயிர் மற்றும் கடல்களை பாதுகாக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரதமர், பருவநிலை மாற்றத்திற்கான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார். பருவநிலை மாற்ற நடவடிக்கைக்கு இந்தியாவின் நிலையான உறுதிப்பாடு குறித்து பேசிய அவர், 2030ம் ஆண்டுக்குள், மாசு இல்லா போக்குவரத்தை ஏற்படுத்த இந்திய ரயில்வே மேற்கொண்டுள்ள உறுதியை குறிப்பிட்டார். பாரீஸ் ஒப்பந்த உறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரே ஜி-20 நாடு இந்தியா என அவர் வலியுறுத்தி கூறினார். இந்தியா மேற்கொண்ட பேரிடர் மீட்பு கட்டமைப்பு கூட்டணி (CDRI) மற்றும் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணி என்ற இரண்டு முக்கிய உலகளாவிய முயற்சிகளின் பயன்கள் அதிகரித்து வருவதையும் அவர் குறிப்பிட்டார். பருவநிலை மாற்றத்துக்கான நிதி, வளரும் நாடுகளுக்கு சிறந்த முறையில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், தணிப்பு, தழுவல், தொழில்நுட்ப பரிமாற்றம், பருவநிலை நிதி, சமபங்கு, பருவநிலை நீதி மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றின் அனைத்து பிரச்சினைகளையும் உள்ளடக்கிய பருவநிலை மாற்றத்துக்கு முழுமையான அணுகுமுறை தேவை என அழைப்பு விடுத்தார்.
திறந்த மற்றும் ஜனநாய சமுதாயம் மற்றும் பொருளாதாரங்களுக்கு இடையேயான உலகளாவிய ஒற்றுமை, சுகாதார சவால்கள் மற்றும் பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதார மீட்பு ஆகியவற்றை சமாளிப்பது ஆகியவை குறித்து பிரதமர் கூறிய தகவல்களை இந்த உச்சிமாநாட்டில் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.