குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன்,தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து இயக்கியுள்ள விருமன் படத்தை முடித்துள்ளார்.
இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் முத்தையா தன்னுடைய அடுத்த படத்துக்கு நடிகர் கமலுடன் கைகோப்பதாக ஏற்கெனவே தகவல் பரவியது. வெறும் 30 நாட்கள் கால்ஷீட்டில் இந்தப் படத்தை முடிக்க முத்தையா திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்பட்டது.
கிராம பின்னணி கொண்ட கதைக்கு பெயர்போன முத்தையா கமலை வைத்து நிச்சயம் சூப்பர் திரைக்கதையுடன் படத்தை கொடுப்பார் என கிசுகிசுத்தனர் கமல் ரசிகர்கள். இது விருமாண்டியின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் முத்தையா அடுத்தப்படத்தில் கமல் நடிக்கவில்லை என்றும், ஆர்யாதான் முத்தையாவின் அடுத்த ஹீரோ எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் முதல்வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இப்படி ஒருதகவல் பரவினாலும், கமல் படத்தில் இருக்கிறார் ஆனால் மெயின் ஹீரோ ஆர்யா என்றும் கூறப்படுகிறது. பல்வேறு யூகங்களுக்கும் ஏப்ரல் மாதம் விடையளிக்கும் எனத் தெரிகிறது.
அரசியல் களத்தில் மிகத் தீவிரமாக இயங்கி வந்த நடிகர் கமல், தற்போது தனது சினிமா கேரியர் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். இந்தியன் 2 படப்பிடிப்பு பிரச்னை காரணமாக தடை பட்டு நிற்க, லோகேஷ் கனகராஜ்ஜூடன் விக்ரம் படத்தில் இணைந்தார் கமல். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது.
இந்தப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அடுத்தப்படத்திற்கான கதைகளை கேட்டு வந்தார் கமல். முன்னதாக, நேர்காணல் ஒன்றில் மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்தார் கமல். இந்தப்படத்தை அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிக்கிறது. அடுத்ததாக கமலை இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் பா.ரஞ்சித்தும், வெற்றிமாறனும் இருப்பதாக தெரிகிறது. ஆனால் பா. ரஞ்சித்துக்கு பாலிவுட்டில் பிர்சா முண்டா படம், விக்ரமுடன் இன்னொரு படம் என கமிட் ஆகியிருக்கிறார். வெற்றிமாறனுக்கு சூர்யாவின் வாடிவாசல் பட வேலைகள் இருக்கின்றன. இந்நிலையில்தான் முத்தையா படத்தில் இருந்து கமல் நடிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திரைக்கதையில் சுவாரஸ்யத்தைக் கொடுத்தாலும் சாதி ரீதியிலான படத்தை கொடுப்பதாக முத்தையா மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்தும் பேசிய அவர், என் படத்தில் எந்தப் படம் குறிப்பாக சாதிப் பெருமையைப் பேசுகிறது என்று நீங்கள் எடுத்துச் சொல்லுங்களேன். சாதியை வைத்து படம் எடுக்காதீர்கள் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்? இதனால் யாருடைய வாயும் வயிறும் நிறையப் போகிறது. சாதி சமூகத்தை பிரிக்கிறது என்று கூறினால் சுதந்திரம் எப்படிக் கிடைத்திருக்கும். சாதி அடக்குமுறை நம் அப்பா காலத்தில் இருந்ததைப் போல் இன்று இல்லையே. நாம் சாதி இருக்கு என்று நினைத்தால் இருக்கிறது. இல்லை என்று நினைத்தால் இல்லை” என்று கூறினார்.