சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேட்டூர், சேலம், எடப்பாடி, சங்ககிரி, கரியகோவில், ஓமலூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
சேலத்தில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி, நாராயணன் நகர், அம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கன மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் பாதாள சாக்கடைக்குள் புகுந்த நிலையில், தண்ணீர் செல்ல வழியின்றி இணைப்பு குழாய் வழியாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதாள சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் செல்லாத வகையிலான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாலை மறியல்
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள காந்திநகர், அண்ணா நகர் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், வீட்டில் புகுந்த மழை நீரை வெளியேற்ற வழி தெரியாமல் இரவு முழுவதும் விழித்திருந்து தண்ணீரை வெளியேற்றினர்.
நேற்று காலை காந்தி நகர், அண்ணா நகரைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு (மிமீ.,): மேட்டூர் 80.6, சேலம் 61.8, எடப்பாடி 26, சங்ககிரி 24, கரியகோவில் 19, ஓமலூர் 15, தம்மம்பட்டி 10, பெ.பாளையம் 6, ஏற்காடு 4.2, வீரகனூர் 4 மி.மீ. மழை பதிவானது.
நேற்றும் கனமழை
இதனிடையே சேலம் மாவட்டத்தில் பரவலாக நேற்றும் கனமழை பெய்தது. சேலத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.