கனமழையால் பொதுமக்கள் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்: தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: தொடர் மழையால் தாழ்வான சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்வதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.
எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து, உணவு, மருந்து வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று, உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும்.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: 2015-க்குப் பிறகு 200 மில்லிமீட்டருக்கும் அதிகமழை பெய்துள்ளது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருப்பதும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதும் கவலையளிக்கிறது.
எனினும், மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள் ஆய்வு செய்து நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதும், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படைகளை அனுப்பி வைத்துள்ளதும் மன நிறைவை அளிக்கிறது.
மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அடுத்த சிலநாட்களில் நிலைமையை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசுமேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பாமகவினர் உதவ வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் மரங்கள் சாய்ந்து, போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்த நாள் பரிசாக இருக்க முடியும்.