கட்டுக்குள் வராத கரோனா: கேரளாவில் ஊரடங்கு வரும் 23-ம் தேதிவரை நீட்டிப்பு;4 மாவட்டங்களில் ‘ட்ரிப்பிள்’ லாக்டவுன்
கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, அங்குநடைமுறையில் இருந்த ஊரடங்கு வரும் 23-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 8-ம் தேதி முதல் 16-ம் தேதிவரை கடுமையான விதிகளுடன் கூடிய ஊரடங்குபிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், கரோனா வைரஸ் பரவலில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறையவில்லை. இதையடுத்து, மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கை கேரள அரசு நீட்டித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பல்வேறு மாவட்டங்களில் இன்னும் கரோனா பாதிப்பு குறையவில்லை, பாதிக்கப்படுவோர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவே 9 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருந்தோம், இதன் மூலம் சிறிதளவு கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தேவை என்பதால், ஊரடங்கு மேலும் ஒருவாரத்துக்கு அதாவது 23-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
இதில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் முத்தடுப்பு லாக்டவுன் நடைமுறைக்கு வருகிறது. கரோனா பரவலைக் குறைக்க இங்கு மிகக்கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும். ஊரடங்கு மூலம் கரோனா பரவலைக் குறைப்பதில் பலனை எதிர்பார்க்க பல நாட்கள் தேவைப்படும்.
கேரளாவுக்கு மே மாதம் மிகவும் முக்கியமானது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடுமையான லாக்டவுன் நடவடிக்கைதான் வட மாநிலங்களில் கரோனா பரவலைக் குறைக்க உதவியது, அங்கு நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
ஆனால், தென் மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடமாநிலங்கள் சந்தித்த சூழலைப் போன்று நாங்கள் சந்திக்கிறோம். அதிகபட்சமான கவனம் செலுத்துவதன் மூலம் உயிரிழப்பைக் குறைத்துள்ளோம்.
லாக்டவுன் காலத்தில் மக்களுக்கான சுமையைக் குறைக்க கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போன்று வீட்டுக்குத் தேவையான சமையல் பொருட்கள் அடங்கிய பை வழங்கினோம், சரியான நேரத்துக்கு சமூக நிதியுதவியை வழங்கியுள்ளோம். சமூக பாதுகாப்பு உதவி மட்டும் ரூ.823.23 கோடி வழங்கியுள்ளோம். மாநிலத்தில் உள்ள 85 லட்சம் குடும்பங்களுக்கும் ஜூன் மாதமும் இலவசமாக சமையல் பொருட்கள் வழங்கப்படும்
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.