மடகாஸ்கர் தீவு அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த அந்நாட்டு அமைச்சர் 12 மணி நேரம் நீந்தி கரையை அடைந்தார் .
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளுடன் பயணித்த கப்பல் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இதில் , 39 பேர் உயிரிழந்தனர் . 68 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது .
சரக்குகளை ஏற்றி செல்ல வேண்டிய அந்த கப்பலில் சட்டவிரோதமாக மக்களை ஏற்றி சென்றனர் . அதிக பாரம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது . இதனிடையே , கடலில் சிக்கியவர்களை மீட்கும்நடவடிக்கையில் மடகாஸ்கர் மீட்புப்படை களமிறங்கியது .
அப்போது புறப்பட்ட ஹெலிகாப்டரில் அந்நாட்டு அமைச்சர் கேலேவும் (Serge Gelle ) இருந்தார் . இந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது . இதையடுத்து கடலில் குதித்த கேலே 12 மணி நேரம் கடலில் நீந்தி அருகில் உள்ள மஹாம்போ என்னும் தீவை அடைந்து உயிர் பிழைத்தார் .
இது தொடர்பான வீடியோ ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது . அதில் , திங்கள்கிழமை மாலை 7:30 மணிக்கு நீந்த ஆரம்பித்து , மறுநாள் காலை 7:30 மணி வரை நீந்தி தீவை அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டரில் பயணித்த மற்றொரு அதிகாரியும் உயிர் பிழைத்தார். அதேவேளையில், ஹெலிகாப்டரின் கேப்டன் மற்றும் அதிகாரி ஒருவரின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அவர்களை தேடும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது.