சினிமா

“ஓ சொல்றியா பாடல் வரிகள் உண்மைதானேங்க”- கலகலப்பாக பேசிய அல்லு அர்ஜுன்

91views

சர்ச்சை ஏற்படுத்திவரும் புஷ்பா திரைப்படத்தின் ‘ஓ சொல்றியா’ பாடல் குறித்து, அப்படத்தின் நடிகர் அல்லு அர்ஜூனிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்டபோது கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தவாரம் வெளியாகிறது. அதை முன்னிட்டு, படக்குழுவினர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது, தனது தமிழ் பிழையுடன் இருந்தாலும், தமிழில் பேசினால்தான் அழகாக இருக்கும் என குறிப்பிட்ட நடிகர் அல்லு அர்ஜூன், படத்தில் செம்மரம் ஒரு பின்னணி மட்டுமே எனவும், மற்றபடி முழுக்க முழுக்க புஷ்பா எனும் கதாபாத்திரத்தை சுற்றியே ஒட்டுமொத்த படமும் நகரும் எனவும் குறிப்பிட்டார். அப்போது, ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு கிடைத்துள்ள எதிர்ப்பு குறித்தும், ஆண்கள் நல அமைப்பின் கண்டனம் குறித்தும் அல்லு அர்ஜூனிடம் செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘பாடல் வரிகள் உண்மைதானே’ என கலகலப்பாக கூறினார்.

பின்னர், ‘இந்தப் படத்துக்காக நாங்கள் நிறையவே மெனக்குட்டுள்ளோம். குறிப்பாக என்னுடைய அந்த கருப்பு நிற தோற்றத்துக்கு, நிறைய உழைக்க வேண்டியிருந்தது. அந்த மேக்-அப்பை கலைக்கவே 40 நிமிடங்கள் ஆகிவிடும். திரையில் பார்க்கையில்கூட அது தெரியவில்லை. ரொம்ப இயல்பாக மேக்-அப் வந்திருந்தது, மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதேபோல படத்தில் என்னுடைய வசன உச்சரிப்புக்காகவும் மிகவும் உழைத்துள்ளோம்.

இந்தப் படப்பிடிப்பு நடைபெற்ற இடமே, நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 மணி நேரம் செல்லும் அளவுக்காக இருந்தது. காட்டுப்பகுதி என்பதால், லைட்டிங் பிரச்னையும் படக்குழுவுக்கு இருந்தது. எவ்வளவு விரைவாக லொகேஷனுக்கு செல்கிறோமோ, அவ்வளவு நல்லது என்பதுதான் எங்கள் நிலை. இதனால், காலை 4 மணிக்கே தங்கியுள்ள இடத்திலிருந்து புறப்பட்டுவிடுவோம். அப்போதுதான் 6 மணி தொடங்கி எங்களால் பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது’ என பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அல்லு அர்ஜூனை போல யார் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர் என்ற கேள்விக்கு, ‘ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொருவர் வருவார். முன்பு கமல்ஹாசன் இருந்தார், பின் விஜய் வந்தார், பின் தனுஷ் – சிம்பு என எல்லோரும் வந்தனர். இப்போதும் கூட, டாக்டர் படத்தில் செல்லம்மா பாட்டில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடனமாடியிருந்தார். சொல்லப்போனால், எனக்கு பெர்சனலாக டாக்டர் படம் மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவுக்கு என் பாராட்டுக்கள். எனக்கு எல்லோரின் நடனுமுமே பிடிக்கும். எல்லொருமே தனித்துவமாக சிறப்பாக உள்ளனர்’ என்று கூறியிருந்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!